பக்கம் எண் :


232புலவர் குழந்தை

   
7. மனையறப் படலம்
 
        1.      ஆந்தமிழ்க் காதல ரளித்த காட்சியை
               மாந்தியே களித்தவூர் மகிழ்ச்சி கண்டனம்
               சாந்தணி கோதையுந் தடக்கை வேலனும்
               சேர்ந்துசெய் மனையறச் சிறப்பைக் காணுவாம்.

        2.      கண்ணிய காட்சியாங் களவு வாழ்க்கையில்
               உண்ணிகழ்ந் தோங்கிய வொருமைக் காதலர்
               எண்ணிய படிநிறை வேறிற் றாமெனில்
               மண்ணிடை யிவர்க்கினி மதிப்பு வேண்டுமோ.

        3.      காதலை யொழுங்குறக் கற்ற காதலர்
               காதல ராயினார் கருத்து மொன்றினார்
               காதலின் களவெனுங் கடலை நீந்தியக்
               காதலின் கற்பெனுங் கரையை மேயினர்.

        4.      சீருற மணவினை செய்மெய்க் காதலர்
               ஓருட லோருயி ருளமு மொன்றிடப்
               பேரொடு பேருறப் பேரு மொன்றியே
               நீரொடு கலந்தநன் னீரைப் போன்றனர்.

        5.      தாமரைத் தாரணி தமிழ நம்பியும்
               தாமரைப் பூமுகத் தமிழ நங்கையும்
               காமுறு காதலங் கயிற்றிற் கட்டிய
               தாமரைப் பூந்தொடை தன்னைப் போன்றனர்.
       
        6.      மடத்தகை வல்லியும் மதிவ லானுமோர்
               நொடிப்பொழு தகலினு நோன்மை யில்லராய்ப்
               பிடித்தெழு காதலாற் பிணிக்கப் பட்டொரு
               படத்தினி லெழுதிய பாவை போன்றனர்.

        7.      இவளுள மவனுக்கோ ரிருக்கை யாகவும்
               இவனுள மவளுக்கோ ரிருக்கை யாகவும்
               இவனவ ளெனும்பெய ரேகக் காதலர்
               இவரெனும் பெயருட னிலங்கி னாரரோ.
-------------------------------------------------------------------------------------------
        3. கற்பு - இல்லறம் 4. பேர் ஒன்றல் - காதலர் எனல். 6. நோன்மை - பொறுமை. படம் - ஓவியச் சீலை.