எழுசீர் விருத்தம் | 8. படையெலாம் வென்ற கண்ணியை மதியைப் பழித்தசெம் முகத்தியை முன்னர் அடையவோர் நொடியோ ராண்டினிற் கழித்து மடைபெற முடிகிலா தயர்ந்த தடையதாங் களவைக் கடந்துநன் னெஞ்சு தளையவிழ்ந் திடப்புணர்ந் தின்னர் இடையறா தின்ப நுகர்ந்துயர் கற்பி னியல்பினை யினிதுகண் டனரே. 9. மண்ணவர் தமக்கோர் மாசிலா மணியாய் மாபெருந் தலைவரா மவர்கள் தண்ணெனக் குளிர்ந்து குறுகிடிற் பிரியிற் றழலென வெதும்புகா தலினால் உண்ணிகழ் புலவி யரும்பல ராகி யூடலாய் முதிர்ந்தது துனியாய் நண்ணியே யுணர்த்த வுணர்ந்துமே தணிந்து நயந்துமே கூடிவாழ்ந் திருந்தார். 10. படத்திலே யெழுதி வைத்தபொற் பாவை பண்பிலே மிவட்குநா மென்றே அடித்தலம் பணிய விரங்கியே யதனை யங்கையா லெடுத்துமே னிறுத்தும் மடத்தகை மயிலே புனத்துறை மானே மனையறம் நடத்திடு முறையெவ் விடத்தினிற் கற்றா யெனக்கென வுற்றா யென்றுமே மகிழ்ந்திடு மண்ணல். ------------------------------------------------------------------------------------------- 8. தளை - கட்டு. இன்னர் - இப்போது. (கற் - 51) கற் - கற்பியல். 9. புலவியாவது - காதல் பற்றிக் காதலர்க் கேற்படும் சிறு மனவேறுபாடு; அப்புலவி அரும்பு மலர்வது ஊடல் எனப்படும்; ஊடல் முதிர்தல் துனி எனப்படும். ஒருவருக் கொருவர் அதன் காரணத்தைக் கூற உணர்ந்து அது நீங்கிக் கூடுவரென்க. 10. பலர் ஏவல் செய்ய வளர்ந்தவள் கீழே விழுந்த படத்தை எடுத்து அது இருந்தவிடத்தில் வைத்ததை வியந்து கூறியது. (கற் - 5. 3,4). | |
|
|