15. மாந்தளிர் மேனி சுமந்திடை நொசியும் மறுவிலா மலர்முக மதியுன் காந்தளங் கையாற் றொட்டதோர் வேம்புங் கரும்பினின் சுவைமிகு சாற்றின் ஆய்ந்துமுக் கனிகள் பிழிந்ததீந் தெளிவி னளியினங் கூட்டுசெந் தேனின் காய்ந்தநல் லாவின் பாலினு மினிக்குங் காரண மறிகிலே னென்னும். 16. பொருந்திய வுரிமைச் சுற்றமோ டுள்ளம் புணரிய நண்பர்க டமக்கும் விருந்தினர் தமக்கு முழைத்துமூ ணின்றி மெலிபவ ரொடுபொரு ளிழந்து வருந்திவந் தவர்க்கும் புலவரை யருக்கும் மனையவ ரேதுணை யென்று பெருந்தமிழ்ப் பொருணூற் பெரியவர் மொழிவர் பிறைநுதற் பேரமர்க் கண்ணே. 17. படுகுளி ரதனில் விறுவிறென் றுள்ள பச்சைமட் குடப்பனி நீரைத் தொடநடுங் குவள்போ னடுங்கினை யன்று தொடத்தொட வப்பனி நீரே கடுவெயி லதனி லின்புறுத் தாங்கு கைபடக் களிக்கிறா யின்று மடமொழி யிதன்கா ரணந்தெரி யாது மயங்கினே னெனநகை யாடும். 18. அன்றுதான் விருந்தென் றுன்மனை வரநீ யயலவள் போலகஞ் சென்றாய் ஒன்றிய தாயும் வேம்பென வெறுத்தா ளுறவுமாங் கேமனை யொளித்தாள் இன்றுநீ யுண்ணு முண்ணுமென் றூட்டி யினிக்குத லெனக் கிறும் பூதே அன்றுநான் கண்ட பெண்மணி நீயோ வல்லளோ வெனநகை யாடும். ------------------------------------------------------------------------------------------- 15. நொசிதல் - வளைதல். (கற். 5:8). 16. அமர்தல் - விரும்புதல். (கற்-5:9) 17. அன்று. களவுக்காலத்து இயற்கைப் புணர்ச்சி முதலியவற்றில்) (கற்.5.10) 18. உட்பொருள் - அகஞ்சென்றாய் - மனம் புக்காய், குறியிடம் புக்காய். உறவு - தோழி. மனை ஒளித்தாள் - என்னை மனையிடை ஒளித்து வைத்தாள். இனிக்குதல் - இனிமை யுண்டாக்கல். இறும்பூது - வியப்பு. | |
|
|