பக்கம் எண் :


இராவண காவியம் 237

   
        22.     அன்னையர் றம்மா வாவெனக் கூவி
               னாவென வாய்திற வாயாம்
               அன்னையின் றம்மா வென்னுமுன் மாமி
               யாவதென் னென்றரு கணைந்தே
               இன்னது சொல்லு மென்பதை யெண்ணா
               வேவலிற் றிறம்பிடா வென்றன்
               அன்னமே யிளமா னன்றுநீ பெண்ணா
               யானையோ வெனநகை யாடும்.

        23.     வாயிலைப் பகைபோல் மறுத்தனை யெல்லா
               மறுத்தபோல் மறுநொடி தனிலவ்
               வாயிலை யேற்றுக் கொண்டெம தெல்லா
               மறுத்தமை பொறுத்தரு ளென்றுன்
               சேயிதழ் திறந்து பெருங்குவை முத்தந்
               திறைகொடுத் துறவினைக் கொண்ட
               ஆயிழை யுன்பே ராண்மையே யாண்மை
               யாருனை யொப்பரென் றறையும்.

        24.     புன்னையங் காய்செய் தவற்றினுக் குன்னைப்
               புலந்தமை பொறுத்தெனை யளித்த
               பொன்னெனப் பொலியும் பூவையே யுன்றன்
               பொறுமையே பொறுமைகொல் யானுன்
               றன்னையென் செயினும் பொறுப்பையால் நானத்
               தவற்றினுக் கொருசிறி தஞ்சேன்
               என்னவின் னனமுன னிகழ்ந்தமை கூறி
               யிருவரு முளங்களி கூர்வார்.
-------------------------------------------------------------------------------------------
        22. அன்னை - செவிலி. இரண்டாவது அன்னை - தலைமகன் தாய், அன்று நீ இளமான். இன்று நீ இளமான் அன்று; பெண் நாய், யானை என இகழ்ந்த வாறு, அன்று சிறுவள்; இன்று பெண் ஆய் ஆனையோ. பெண் ஆகினாயோ. ஆய் - ஆக. 23. எல்லா - முறைப் பெயர். முதலில் தலைவன் தலைவியையும், இரண்டாவது தலைவி தலைவனையும் விளித்தது. இது, இன்று - கணவன் மனைவியை ‘இல்லே, அல்லே, ஏல்லே’ என வழங்குகிறது. முத்தம் - பல். 24. புன்னைக் காய்கள் தாமாக நீரில் விழ, அது தலைவி செய்த குறியெனச் சென்று தலைவியங்கில்லாமையால் புலந்தானென்க. இது, அல்ல குறிப்படல். அன்று வறுங்களங்கண்டு பின்னர் உற்ற போது புலந்தமை. (கற்-5.13).