14. செல்வ மில்லவர்க் கிவ்வுல கினிற்சிறப் பிலையச் செல்வ மோசிறப் புறுவது கல்வியாற் றெளிவாம் கல்வி யில்லவர் செல்வத்தாற் கணிப்புற லிலையால் கல்வி யேசிறப் பாகுமற் றதனிலுங் காண்பீர். 15. சென்று புல்லணு மானினுக் கப்புலே செல்வம் என்ற போதினும் பகுத்தறி விலாமையா லியாரும் நின்ற வானினை மகனென வுரைப்பது நிலத்தில் ஒன்று கல்வியில் லாருமவ் வானினை யொப்பர். 16. குறைந்த ழிந்துபோய் வெறுமையிற் குப்புற வீழ்த்தும் நிறைந்த செல்வமுங் கொடுக்கினு நிறைவுற லன்றிக் குறைந்தி டாமையாற் கல்வியே குறைவிலாச் செல்வம் அறைந்து போயின ராமென வறிவுநூற் புலவர். 17. புலவர் பாடிலாப் பழந்தமிழ்ப் புரவலர் பெயரை நிலவு லகினிற் கேட்பதுண் டோநெடு நீரில் இலகு தாமரைப் பூமண மொடுநிற மின்றேல் உலகில் யாரதைப் பூவென வடையின்றி யுரைப்பர். 18. தன்பெ யர்குறித் தோதிடாத் தற்குறி தன்னை இன்ப துன்பமோ டுண்பினுக் கிருப்பிட மாகி என்பெ னும்பெயர் தாங்கிய தென்பதல் லாமல் மன்ப தைக்குளோர் மகனென வழைப்பது மதியோ. 19. முன்னை யோர்நடை முறைகளை முறையொடு புலவர் இன்ன வென்றியாத் திருத்திய பழந்தமி ழியனூல் தன்னை யாய்ந்துபொன் னன்னவர் தகுதியில் வாழப் பன்னு கல்வியல் லாலெவை துணையுறும் பார்க்கின். 20. சொல்லி னின்பமுஞ் சொற்பொரு ளின்பமுஞ் சொல்லிற் செல்லு சொன்னடை யின்பமுஞ் செறிந்தசொற் பொருளைக் கல்லி யின்புறுங் கருத்தின தின்பமு மொருங்கே புல்லி யின்புறாத் தற்குறி தமிழகப் பொறையே. ------------------------------------------------------------------------------------------- 17. அடை - அடைமொழி. ‘பூவுக்குத் தாமரையே’ என்பதறிக. 18. குறித்து - எழுதி. ஓதிடா - படிக்கத் தெரியாத. என்பு - உடம்பு. மன்பதை - மக்கட் பரப்பு. 19. பன்னுதல் - புகழ்தல், சொல்லுதல். 20. கல்லி - ஆழ்ந்து நோக்கி. புல்லி - பொருந்தி. பொறை - சுமை. | |
|
|