21. கண்ட றிந்திடா வியற்கையின் காட்சியைப் புலவர் கண்ட செந்தமிழ்ப் பாவிடை கஞலுகண் ணாடி அண்டு செம்பொருள் போலறிந் தின்புற வறியார் உண்டு டுத்தொரு புதுவிலங் குண்டெனி லொப்பர். 22. சென்ற நின்றவின் றியல்பொருட் செயலினைத் தேர்ந்தே இன்று செய்வன தவிர்வன விவையென வோர்ந்தே நன்று செய்துதீ தொழிந்துமே நலம்பெற வாழ ஒன்று நூலறி வலாலெவை யோதுதற் குரிய. 23. மாவின் வேறுரு வேயலால் வேறிலா மாக்கள் மேவி மக்களென் றொருபெயர் மிகைபட வாழ ஆவி யன்னமுன் னோர்புரந் தாக்கிய வெழுதா ஓவ மன்னநூ லறிவலான் வேறியா துண்டோ. 24. மடிமை வாழ்வினை யகன்றுமே செயன்முறை வாய்த்து மிடிமை வாழ்வினை யகன்றுமே பெரும்பொருள் மேவி அடிமை வாழ்வினை யகன்றுமே யுயர்நிலத் தமருங் குடிமை வாழ்வினை யறிவியற் கல்வியே கொடுக்கும். 25. தானு மின்புறீஇக் கேட்டவ ரின்புறூஉந் தகைகண் டீனு மின்புறூஉ மியல்பிலார் நாவுறூஉ மின்பத் தேனும் பாலுமுக் கனிபிழி தேறலு மன்றி ஊனு முள்ளமு முயிருமின் புறுமின்ப மோரார். 26. எவ்வி னைக்குமே யறிவின்றி யமைவுறா வியல்போல் கைவி னைக்குமக் கைவினை நலம்படக் கவினச் செய்வி னைக்குமக் கல்வியே செறிதுணை யென்றால் உய்வி னைக்கிதை யன்றிவே றுறுதுணை யுண்டோ. 27. எனைய றத்தையு மியல்புட னாக்குதற் கியன்ற மனைய றத்தினை யாக்கிடுங் காதலின் வாழ்க்கை தனைய றத்தொடும் பொருளொடுந் தகுந்தவின் பத்தும் அனைய றத்தொடு மாக்குதல் நூலறி வன்றோ. ------------------------------------------------------------------------------------------- 21. கஞலுதல் - விளங்குதல். 22. சென்ற நின்ற இன்று - இறந்த காலம், எதிர்காலம், நிகழ்காலம். தேர்தல் - ஆராய்தல். ஓர்தல் - உணர்தல். 25. ஈனும் - மிகவும். தேறல் - சாறு. | |
|
|