பக்கம் எண் :


இராவண காவியம் 245

   
         41.    அற்றையநூல் களைப்போற்ற லோடமையா
                    தந்நூல்க ளமைவோ டாய்ந்து
               கற்றவையின் கருத்துணர்வோ டைந்திணையி
                    னியற்கையொடு கலந்து நல்லோர்
               இற்றையநாட் கேற்றபடி யிலக்கியமு
                    மிலக்கணமு மிசையுங் கூத்தும்
               பொற்றகைய பலப்பலவாப் புதுநூல்கள்
                    செய்துமொழி போற்றல் வேண்டும்.

         42.    தாய்மொழியாந் தமிழ்நிலத்தைப் புலத்தேரா
                    னன்குழுது தகுந்த வித்தாம்
               ஆய்மொழிநெல் லதைவித்தி யணியென்னு
                    நல்லெருவிட் டமைவ தான
               பாய்பொருளா நீர்பாய்ச்சிப் பாவென்னும்
                    பயனுதவிப் பரிந்து காக்கும்
               வாய்மொழிச்செந் தமிழ்ப்புலவர் தமைப்போற்றித்
                    தாய்மொழியை வளர்க்க வேண்டும்.

         43.    தன்னலமென் பதையறியார் பொதுநலநன்
                    கலம்பூண்டு தமிழர்க் கெல்லாம்
               கொன்னலமும் பொருணலமுஞ் சுவையகருத்
                    தின்னலமுந் தோய்ந்த பாவாம்
               நன்னலஞ்செய் தேதமது குடிநலத்தோ
                    டுடனலமு நாடா தேனைப்
               பொன்னலமும் புனையாது தமிழ்வளர்க்கும்
                    பெரியாரே புலவ ராவர்.

         44.    அத்தகைய தமிழ்ப்புலவர்க் கில்லையெனுங்
                    கவலையென்று மணுகா வண்ணம்
               எத்தகைய பொருளேனு மவர்விரும்பும்
                    பொருளவர்க்கே யியைந்த தாக்கிக்
               கைத்தகைய பாணரையுங் கூத்தரையு
                    மவரோடு கலந்தா ராக்கி
               முத்தமிழை நனிவளர்த்தல் மன்னவர்க்குஞ்
                    செல்வருக்கு முறைமை யாகும்.
-------------------------------------------------------------------------------------------
         42. அமைவு அது ஆன - தகுதியான. பாய் - பரந்த. பரிந்து - அன்போடு. 43. சுவைய - சுவையை யுடைய. சுவை மெய்ப்பாடு. குடி - குடும்பம். 44. கைத்தகைய - கையில் தகுதி வாய்ந்த.