45. பொதிபொதியாய்ப் புலவருக்குப் பொருள்கொடுத்து முன்னோர்கள் போற்றி னார்கள் அதுநமக்குங் கடப்பாடா மெனவவையோ ரெங்கடனு மதுவா மென்றார் முதுமொழிவாய்ப் புலவர்களு மம்முறையில் யாஞ்சிறிது முரணோ மென்றார் மதிவிரும்புங் குடையானு நின்றதனை யினிதெடுத்து வழங்க லானான். 46. புதுமைக்கும் பழமைக்கு முரணின்றி யொன்றாகப் பொருந்த வேநம் முதுமக்க ளொழுக்கமெலா முட்கொண்டு திகழ்ந்துலக மொழிநூற் கெல்லாம் இதுமிக்க தெனக்கொண்டு கருத்தொடுணர் வதுபொங்கி யழவுள் ளத்தே பதியத்தொல் காப்பியத்தைத் தமிழரெலா மெழுத்தெண்ணிப் படித்தல் வேண்டும். 47. நால்வகைய தகையாழி னரம்புவழி யிசைபரவி நடந்து செல்ல நூல்வகைய வமைத்தியக்குந் திறலோடு துளைவழியே நுணுக்க மாக மேல்வகைய விசையேழுங் குழலூடு புகச்செலுத்த மேன்னை யோடு பால்வகைய பலபறையு மறைந்திடவு மெல்லோர்க்கும் பழக்கம் வேண்டும். 48. ஏவறிய வியலாப்பச் சிளங்குழவி யுங்குழைந்துள் ளெழுச்சி பொங்க நாவடக்கிக் கேட்டின்புற் றுறங்கும்விலங் கினம்புள்ளு நயந்து கேட்கும் மேவியபன் மனக்கவலை பறந்தோடும் மேவாரும் விழைவா ரென்றால் பாவிசையின் சிறப்பறிந்து பயிலாதா ரின்பொன்றும் பயிலா தாரே. ------------------------------------------------------------------------------------------- 47. அமைத்தல் - நரம்புகட்டல். பால்வகைய - பலவகைப்பட்ட 48. ஏவு - கட்டளை. பா - பரத்தல். | |
|
|