49. பாட்டறியா ரப்பாட்டைப் பண்ணோடு பாடலொடு பாடி யாடும் ஆட்டறியா ரவ்வாட்டைப் பாவிசையைப் பாடலுட னாடக் கண்டு கேட்டறியார் பாட்டாட்டுக் குரித்தான முக்கருவி கிழமை யோடு கூட்டறியார் வாழ்வினிடை யின்பமெனுஞ் செம்பொருளைக் கூட்டா தாரே. 50. பண்ணமைய மூவகைய கருவியொடு தொகப்பாடிப் பழக வேண்டும் கண்ணமைய வகத்துளெழு மெண்சுவையும் காண்போர்க்குக் கருத்து ளாக எண்ணமைய பலகூத்து மினிதாடிப் பழகியவை யிணையி லாது மண்ணமைய வளர்ந்தோங்கச் செயல்தமிழர்க் கெலாமொருவா மரபே யாகும். 51. கைத்திறத்த வாய்த்திறத்த கருத்தொருமித் தியக்குபல கருவி யோடு மெய்த்திறத்த விறற்றிறத்த வாடலொடு பண்ணமைய விரும்பிப் பாடும் உய்த்திறத்த விசையோடு பாத்திறத்த வியலோடுள் ளுருகக் கற்றே முத்திறத்த தமிழ்வளர்த்து முன்னோரின் வழிகாத்தல் முறைமை யாகும். 52. என்றுரைத்துத் தமிழ்க்கழகத் திசைவளர்க்கு மிசையானை யினிது நோக்கக் குன்றுரைத்த குவவுத்தோட் குலப்பாண்டி நாடானுங் கோட்டி யார்ப்ப நின்றுரைப்பான் றிசையெல்லா மிசைவளர்க்கு நெடியோனே நிலவு போலச் சென்றுறைக்குந் தாய்மொழியை வளர்த்துவர லேயெனது செங்கோ லாகும். ------------------------------------------------------------------------------------------ 49. முக்கருவி - தோல், துளை, நரம்புக் கருவி. 50. தொக - பொருந்த. எண்சுவை - வீரம், அச்சம், இழிப்பு, வியப்பு, காமம், அவலம், பெருமிதம், நகை. ஒருவா - நீங்கா. மரபு - முறைமை. 51. கைத்திறத்த - தோல், துளை, நரம்புக்கருவிகள். விறல் - மெய்ப்பாடு. உய்த்தல் - செலுத்துதல். 52. கோட்டி - அவை. உறைத்தல் - மிகுதல். | |
|
|