68. அன்றியுமற் றொன்றுளநன் னாடாள்வோர் கடமைகளுள் அஃதென் னென்னில் வென்றிவடி வேல்வாள்வில் மறப்படையும் அலர்வாகை வேய மாட்டா தென்றலுடல் நலப்பாட்டுக் கெவ்வளவோ அவ்வளவே செங்கோல் மன்னர் முன்றிலிற்பாட் டாட்டயரக் குடிமக்கள் அறந்திறம்பா முறையே யாகும். 69. எண்ணஞ்சொற் செயன்மூன்றுந் தூயனவாய் மக்களெலா மியன்றே வாழும் வண்ணஞ்செய் துலகோம்பல் நிலனாளும் நல்லரசர் மரபே யாகும் உண்ணஞ்சு போற்றீமை மக்களுளங் குடிகொள்ளின் ஒன்னார் செய்யும் கண்ணஞ்சாக் கொடுமையெலா மெஞ்சாது செய்தரசைக் கவிழ்க்குந் தானே. 70. இன்னசெயத் தகுவசெயத் தகாதவின்ன வெனச்சான்றோ ரினிதா ராய்ந்து சொன்னவறந் தனைமக்கள் கடைப்பிடித்து நடக்கும்வகை துணிந்து செய்யா மன்னவர்தங் கோல்கோடிக் குடிகளுக்கின் னாதசெயும் வகைய ராகி ஒன்னலர்காய் வில்லாம லரசிழந்து தாமாக ஒழிகு வாரே. 71. ஒழுக்கமெனு மொருபொருளே மாக்களைமக் களுக்குயர்த்தும் உயர்பண் பாகும் இழுக்கமத னெதிராகு மாதலினால் அவ்வொழுக்கத் திழுக்கா வாறு வழக்கமுற மக்களெலா மியலும்வகை செய்தணுவும் வழுவா வண்ணம் கழுக்கடைநின் றாடுதல்போல் தனிக்காத்தல் மண்ணாள்வோர் கடமை யாமே. ------------------------------------------------------------------------------------------- 68. உள - உள்ளது. முன்றிலில் பாட்டாட்டு அயர்தல் பகையின்மை. 69. கண்ணஞ்சாக் கொடுமை - கண்ணோட்டமில்லாது செய்யும் கொடுமை. 71. மக்களுக்கு - மக்கள் நிலைக்கு, கழுக்கடை - சிற்றீட்டி. | |
|
|