21. கடுநடை மடங்கலைக் கண்ட யானைகள் பிடியொடு குன்றிடைப் பெயர்ந்து செல்லுதல் அடன்மிகு தமிழருக் கஞ்சி மாதர்க ளொடுவட வாரிய ரோடல் போலுமே. 22. பூக்களுங் கனிகளும் பொருந்து காய்களும் தேக்கிழங் கொடுநறுந் தேனுஞ் சாந்தமும் மாக்களும் புட்களு மணியும் வேய்நெலும் காக்குமக் குன்றமங் காடி போலுமே. 23. இனையபல் காட்சிக ளின்னு மெண்ணில புனைபட வுரைத்திடப் பொழுது கண்டிலம் அனையசீ ரிடத்தினி லங்கு மிங்குமாய் வனைபழந் தமிழர்கள் வாழ்ந்து வந்தனர். 24. அழைபடு தொலைவினி லவர்கள் வாழ்ந்ததால் கழைபடு தமிழர்கள் கலப்பு நின்றுபோய் இழைபடு செந்தமி ழியல்பி னீங்கியே பிழைபடு தமிழ்மொழி பேசி வந்தனர். 25. ஆயிடை யுந்தமி ழகத்த தாயினும் சேயிடை யொடுதமிழ்ச் செறிவு மின்மையால் மீயுயர் மலையரண் விறலிற் காத்தலான் தாயிடைப் பிரிந்தர்போற் றனித்து வாழ்ந்தனர். 26. கோப்புடை யவிர்மதிக் குடையி னீழனீத் தாப்புடை வாழ்ந்துவந் தவர்கள் தங்களைக் காப்பவ ரின்றித்தங் களுக்குத் தாங்களே காப்பவ ராகித்தற் காத்து வந்தனர். 27. அலகுற வோம்புபே ரரச ரின்மையாற் பலசிறு நாடுக ளாகப் பாகுபட் டுலவறு கோட்டைக ளுடைய தாய்ப்பல தலைவரை யுடையதாய்ச் சமைந்தி ருந்ததே. ------------------------------------------------------------------------------------------- 20. மடங்கல் - சிங்கம். 21. வேய் - மூங்கில். 23. வனை - அழகிய. 24. அழை படு தொலை - கூப்பிட முடியாத தொலைவு. கழை - இனிமை. இழைபடுதல் - ஒழுங்காதல். 26. கோப்பு - அலங்காரம். 27. அலகு - வரையறை. உலவு - கேடு. | |
|
|