பக்கம் எண் :


26புலவர் குழந்தை

   
     என்று ஓர் அருமையான பாடலைத் - தென்னிலங்கை இராவணன் பற்றியதோர்
அழகான படப்பிடிப்பைத் - தந்துதவினார். பின்னர், பாவேந்தர் கருத்துக்கேற்ப, ‘எழுத்து
சொல் பொருள் யாப்பு அணி என்னும் ஐந்தினும் பழுத்த வாய்மொழிப் பாவலர்’ ஆன
புலவர் குழந்தை அவர்கள், இராவணனின் ஏற்றம் கூறும் இராவண காவியத்தை இயற்றித்
தந்து, இருபதாம் நூற்றாண்டில் மாகாவியங்கள் வெளிவரவில்லை என்ற குறையை நிறைவு
செய்தார்கள்.

     ‘என்றுமுள தென்றமிழால்’, ‘செவிநுகர் தீங்கனிகள்’ தந்த கவியரசன் - ஆம்!
பன்னீராயிரம் பாடிய கம்பன், ‘ஆசைபற்றி அறைய’ லுற்ற ‘இராமகாதை’யில், வீரத்
தமிழனை - அரும்பெருந்திறல் வாய்ந்த தென்னிலங்கை இராவணனை, ‘இரக்கமென்றொரு
பொருளிலா அரக்கர்’ தம் தலைவனாக்கினான்; இராமனைத் தெய்வமாக்கினான்.
கவியரசன் கம்பன் கற்பித்த மாசினைப் போக்கிப் புலவர் குழந்தை அவர்கள், ‘மாசறு
பொன்’னாக, ‘வலம்புரி முத்தா’க, ‘மாசிலாத் தமிழ்மாக்கதை‘யாக இராவண காவியத்தை
இயற்றித் தந்தார். இதனைப் ‘பாவணமல்கும் இராவண காவியம்’ என்றே புரட்சிப்
பாவேந்தர் பாராட்டி மகிழ்ந்துள்ளார்.

     ஆரியப் பண்பாட்டிற்குக் கைலாகு கொடுத்து வரவேற்றுச் செந்தமிழ் மக்களிடையே
அதைத் திணிக்க உதவும் ‘இராமகாதை’யைக் கம்பன் இயற்றிப் பல நூற்றாண்டுகளுக்குப்
பின்னர், அவ்வாரியப் பண்பாட்டைத் தடுத்துத் தமிழர் பண்பாட்டைத் திராவிடர்
நாகரிகத்தைக் - காக்கும் நோக்கத்தோடு புலவர் குழந்தை அவர்கள் இராவண காவியம்
இயற்றி வெளியிட்டார்.

     இருபெரும் புலவரும் காவியம் இயற்றினர். ஒருவர் ‘இராமாயணம்’ எழுதினார்;
இன்னொருவர் ‘இராவண காவியம்’ இயற்றினார். முன்னவர் ‘ஆரியமாயைக்கு’
ஆட்பட்டவர்; பின்னவர் தமிழ்ப் பண்பாட்டிற்குத் தம்மை ஆட்படுத்திக் கொண்டவர்;
அது மட்டுமன்று, தமிழினம் - தமிழ்ப் பெருமக்கள் - ஆரியத்திற்கு அடிமைப்படும்
இழிநிலை கண்டு இதயம் கொதித்தவர்; கொத்தடிமை நிலைகண்டு குமுறி எழுந்தவர் -
காழ்ச்சிந்தை கொண்ட கன்னித் தமிழ்ப் புலவர்.

     வான்மீகி இராமாயண மூலத்திலிருந்து கம்பன் தனது இராமாயணக் கதையைப் -
பாத்திரங்களைப் - படைத்தான் எனினும், தமிழ்ப் பண்பாடு என்று தான் கருதியதற்
கேற்பப் பல மாறுதல்களையும் ஆங்காங்கே செய்து தமிழுணர்வினைக் காட்டியுள்ளான்.
வருணனைகளும், சொல்லாட்சியும் விரவியுள்ள