7. கண்ட வாறு களிப்ப வடைகுநர் உண்ட வாறுதா முண்டு களித்திடும் தண்ட மிழர்தந் தாவி லொழுக்கினால் உண்ட வர்நன் குவந்தங் கிருந்தனர். 8. நெற்குப் பாய்தரு நீரந்த நெல்லடை புற்குப் பாய்தரப் புல்லிய வப்புலும் நெற்குத் தீமைசெய் நீர்மைபோ லுண்டவவ் விற்குத் தீமை யியற்றுங் கொடியவர். 9. அடுக்க நின்ற அவர்நா ளடைவினில் குடக்கு நின்றுங் குணக்கிற் பரவியே கெடுக்க நின்ற கெழுமிய சூழ்ச்சியால் ஒடுக்கி யாங்குவாழ்ந் தாரை யுயர்ந்தனர். 10. அன்னர் தந்நிலை யாயபின் னந்நிலம் தன்னி கர்தமிழ்த் தாயை விலக்கியே துன்னு பல்வளந் தோயுந் தமிழகம் தன்னி னின்று தனித்திட லானதே. 11. மன்னி யங்குமுன் வாழ்ந்தநன் மக்களை உன்னி வந்ததம் ஊறிய சூழ்ச்சியால் வன்னி லம்படு மட்குடம் போற்சிதைந் தின்ன லுற்றடி மைப்பட வெற்றினர். 12. அடங்கி யாரியர்க் காளடி மைப்பட மடங்கி வாழ்ந்த பழங்குடி மக்களுக் கிடங்கு சூத்திரப் பட்டம திட்டனர் அடங்கி லாரை அரக்கர்க ளென்றனர். 13. இன்ன தன்மையை மாற்றியே யன்னவர் சொன்ன தன்மையைச் சொல்லுத லோடவர் இன்ன தன்மைய ரென்றவ ரேமுனம் சொன்ன நூல்வழி யேசில சொல்லுவாம். ------------------------------------------------------------------------------------------- 11. எற்றினர் - நன்னிலையிலிருந்து கீழே தள்ளினர். 12. இடங்குதல் - ஒடுங்குதல். | |
|
|