69. மற்றவர் தம்மையும் வண்டமிழ் மக்கள் முற்றிய வின்ப முகத்துட னேற்றுப் பெற்றவர் போலப் பெருவிருந் தூட்ட உற்றவ ராக வொருங்குற வாழ்ந்தார். 70. ஆயிடை யுள்ள வரசர்க ளோடும் போயுற வாடிப் புலம்பெய ராத நேயர்க ளாகி நிழலென நீங்காத் தாயினு மன்பு தனைப்பெற வாழ்ந்தார். 71. என்னிவர் தங்க ளிணையிலி யன்பு தன்னைநம் மூரவர் தானறி வாரோ பொன்னல வின்னும் புதியவர் வேண்டின் இன்னுயி ராயினு மீகுவர் போலும். 72. கண்மையி னோடு கருவினி லேயே வண்மையு மன்பும் வருவிருந் தோம்பும் தண்மையுஞ் சால்புந் தகைமையு நண்பும் உண்மையில் மேயவ ரொண்டமிழ் மக்கள். 73. நன்னல மேயவொர் நாளிலே யீங்கு துன்னிட வுள்ளந் துணிந்தது போலும் மன்னியே யீங்கு மதிப்பொடு வாழ்தற் கென்னினி யென்றவ ரெண்ணியே வாழ்ந்தார். 74. இப்படி நாள்பல வேகவே சில்லோர் அப்புற நாட்டி னகன்றக நாட்டின் உப்புற மெக்கணு முற்றவர் பின்னர் நப்பெரு செந்தமிழ் நாட்டையுங் கண்டார். 75. தாவில் வளத்த தமிழக மெங்கும் மேவியே யின்பம் விழுத்தக வெய்திப் பாவல ரோடும் படிப்படி யாகக் காவல ரோடுங் கலந்துற வானார். 76. செந்தண்மை பூண்டு திகழுயிர்க் கெல்லாம் பொந்திக ளென்னப் பொதுநலஞ் செய்யும் அந்தண ரென்னு மறிவர்க ளோடும் சிந்தை கலந்து தெளிந்துற வானார். ------------------------------------------------------------------------------------------- 72. கண்மை - இரக்கம். தண்மை - மேன்மை 74. உப்புறம் - நடு. ந - சிறந்த 76. பொந்தி - உடல்; உயிர்க்கு உடல் போன்றவர். | |
|
|