பக்கம் எண் :


இராவண காவியம் 273

   
        88.    இங்கிவரிப் படியாக வகநாட்டில்
                   வாழ்ந்துவர இலைவேய் குச்சிற்
              றங்கிமனை மக்களொடுந் தனியாயும்
                   புறநாட்டிற் றழைப்ப வாழ்ந்தோர்
              அங்குறையுந் தமிழரிடந் தவநிலையா
                   ரெனக்கூறி யவர்கா ணாமல்
              தங்கள்குலத் தொழிலான கொலைத்தொழிலும்
                   குடித்தொழிலுந் தாமேற் கொண்டார்.

        89.    பேணாது வாய்மொழியைத் தவமறைந்து
                   புலையுணலைப் பெரிதாகக் கண்டுங்
              காணாது முயிர்கொன்றூ னுண்பதனோ
                   டமையாது களிப்பா னுள்ளங்
              கோணாது குடிப்பழக்க மில்லாத
                   தமிழகத்தே குடித்தே யன்னார்
              மாணாது செய்தறத்தை மதியாம
                   லேநடந்து வந்தார் மன்னே.

        90.    அதையறிந்த பழந்தமிழ ரீதென்ன
                   கொடுமையென வன்னா ராய்ந்து
              புதைபொருளாய்ப் பொய்பொதிந்த புன்மையதாம்
                   புதுமையினைப் புளுகிக் கட்டுக்
              கதையினைமெய்க் கதையென்ற நம்பிடவே
                   வேள்வியென்றுங் காணா வானிற்
              சிதைவறியா திருக்கின்ற தேவருண
                   வாமென்றுந் திரிபாய்ச் சொன்னார்.

        91.    ஈதென்ன புதுமையநா முண்பதுபோய்
                   வான்வாழ்வார்க் கெவ்வா றூணாம்
              சூதிதுவே வானோரை யெங்குகண்டீர்
                   ஒல்லுவதோ சொல்லும் மேலும்
              ஏதெனினுங் கொல்லுவது பொல்லாதாம்
                   புலைகளுண்டீங் கிருப்ப தேலாப்
              போதுதிர்நுந் தாயகத்தே யிலைப்புலையென்
                   றாலீங்கு பொருந்து மென்றார்.