பக்கம் எண் :


இராவண காவியம் 275

   
        96.    வெற்றியிலா விடினோடிப் போவதும்பின்
                   வருவதுமா வெளிப்பா டின்றி
              அற்றம்பார்த் திருந்துவட வரசர்தமி
                    ழரசர்களை யழிவு கண்டும்
              ஒற்றுமையைக் குலைத்தொருவர்க் கொருவர்பகை
                   கொளச்செய்து முளப்பண் பில்லார்
              குற்றமற்ற பழந்தமிழ மன்னருக்குப்
                   பெருந்தொல்லை கொடுத்தா ரந்தோ.

        97.    நெஞ்சிலுர மில்லாத வடமன்னர்
                   முடிவில்வெரிந் நெஞ்ச ராகப்
              பஞ்சுபடாப் பாடுபட்டுப் பறந்தோட
                   முனிவருளம் பதைத்துப் பாங்கில்
              வஞ்சனைசெய் தேதமிழ மன்னர்களை
                   யொழிக்கவிருள் மனக்கொண் டவ்வா
              றஞ்சினவர் போனடித்தை யோகூடிக்
                   கொடுத்தார்க ளயலா ரம்மா.

        98.    இன்னாத தமிழருள வாற்றமிழ
                    மன்னவர்த மிறுவாய் கண்டும்
              அன்னார்மெய்க் காப்பின்றித் தனித்தவிடத்
                    தடுத்தொழித்து மன்னார் வாழ்ந்த
              பன்னூறு கோட்டைகளை யெரியூட்டிப்
                   பாழ்படுத்தும் பழிக்கஞ் சாதார்
              உன்னாத கொடுமையெலாஞ் செய்துதமி
                    ழரசர்களை யொழித்தா ரந்தோ.

        99.    மெய்வகைய வலவேது மறியாத
                    தமிழ்மக்கள் விடுபா டாகிச்
              செய்வகைய வினவென்ற தெரியாமற்
                   றாயிழந்த சேய்போ லேங்க
              ஐவகைய சூழ்ச்சிகளி லொருசிறிதுந்
                    தவறாம லவர்கை யாண்டே
              உய்வகைய விந்தகநாட் டரசர்களைப்
                   பெரும்பாலு மொழிந்தா ரம்மா.
-------------------------------------------------------------------------------------------
        99. ஐவகைச் சூழ்ச்சி - நட்புப்பிரித்தல், நட்புக்கூட்டல், அடுத்துக் கெடுத்தல், பொருட்கேடு, ஆராயாது செய்தல்.