பக்கம் எண் :


இராவண காவியம் 277

   
        104.   ஆன்றதமிழ் மறவரொடு சுவாகுவெனும்
                   படைவலனை யனுப்ப வன்னான்
              தேன்றவழு மலர்க்காவந் திகழுமிடை
                    வளநாட்டைச் சென்று கண்டு
              மீன்றவழு மணிமாடத் தெருக்கடந்து
                    திருக்கோயில் மேவி நாளும்
              சான்றவர்கள் புகழ்ந்தேத்தும் தாடகையைக்
                    கண்டுதொழத் தமிழ்மூ தாட்டி.

        105.   வருகவென வரவேற்று முகமனுரைத்
                    திலங்கையர்கோ மானைப் போற்றித்
              திருவுடையீர் ஒருபுடையா யென்மகன்மா
                    ரீசனுக்குத் திடமாய் நீங்கள்
              தருவளரு மிடைவளத்தைக் காப்புடையீ
                   ராயமர்ந்து தமிழ்வாழ் மக்கட்
              கொருகுறையு மில்லாமல் ஆரியர்கொன்
                    றுண்ணாம லொழிப்பீ ரென்றாள்.

        106.   அரசிதிரு மொழிப்படியே யாங்காங்கே
                   யருங்காவ லமைத்தே யன்னார்
              கரிசனமா யிருந்துகொலை புரியாது
                    மவர்சோமக் கள்ளுண் ணாதும்
              வரிசையுட னேகாத்து வருகையிலே
                    தமிழர்பகை வாங்கத் தந்த
              பரிசெனவே கோசிகப்பே ராரியனும்
                   வேள்விநிலை பண்ணுங் காலை.

        107.   அதையறிந்த தமிழரசி யாள்விடுத்துத்
                    தடுப்பவவ னகலா னாக
              அதையவர்கள் வந்துசொலப் படைத்தலைவ
                   னிளவலுட னாங்குச் சென்று
              முதியவிது முறையல்ல உயிர்கொன்று
                    பகைதேட முயல வேண்டா
              இதையொழிதி யெனவவனு மில்லையெனப்
                   பெயர்ந்ததற்பி னியற்ற லானான்.