108. கொதிக்கின்ற நெய்யினிலே யிட்டுவறுத் துணவுயிரைக் கொல்லும் வேளை பதைக்கின்ற அவ்வுயிரைக் காப்பாற்றத் தாடகையும் படையோ டேகிச் சிதைக்கின்ற வுயிரிகளை யவிழ்த்துவிட்டு நெய்காயுந் தீய வித்துப் புதைக்கின்ற வயிறெரிய வேள்விசெய முடியாது புறம்போ மென்றாள். 109. அம்முனியு முளநொந்தவ் விடத்தைவிட்டுத் தம்மவரோ டகன்றான் பின்னர் இம்முறையே தன்னாட்டி னிடைவேள்வி யெனும்புலைமை யில்லா வண்ணம் செம்மையுடன் பார்த்துவரத் தாடகையுந் தனிக்காப்புச் செய்தே காத்தாள் இம்முறையி னீங்காக இனிவடக்கில் தசரதன தியல்பு காண்பாம். | 3. தசரதப் படலம் | கலித்துறை | 1. ஆமி தென்றறி யாவட வாரிய ரடைந்து காமு றுந்தமி ழகமதி லமைந்தமை கண்டாம் கோம கன்பெரு கோசல நாடெனக் கொண்ட காமு கன்புதுத் தசரதன் இயல்பினைக் காண்பாம். 2. மரம டர்ந்தமா விந்தமா மலையதன் வடக்கில் பரவி வாழ்ந்தனர் ஆரியர் அவர்வளர் பதியில் சரயு வென்றிடும் பேரியாற் றங்கரை தன்னில் அரண மைந்ததொன் றாகுமா லயோத்திமா நகரம். 3. அவ்வ யோத்தியில் குறுநில மன்னனா வமர்ந்தே எவ்வ மின்றியே யாண்டபேர்த் தசரத னென்பான் கொவ்வை வாய்மொழிக் கோசலை யெனுங்குறுங் கொடியைச் செவ்வி தாய்மணம் புரிந்துநன் மனையறஞ் செய்தான். | |
|
|