பக்கம் எண் :


இராவண காவியம் 279

   
       4.      கன்னி கோசலை யோடவன் காதலிற் களித்துச்
              சொன்ன காமநூல் முற்றுறு துறையெலாந் தோய்ந்தே
              அன்ன வாறுநாள் செல்லவே குறுநில மாளும்
              மன்னன் மாமகள் சுமத்திரை தன்னையும் மணந்தான்.

       5.      இருவ ரோடமர்ந் தின்புற லோடமை கில்லான்
              பருவ மங்கையர் சிலரொடு மின்பினைப் பகிர்ந்தே
              மருவி வாழ்ந்தவன் வருகையில் தனதுதோள் வலியால்
              அருகி ருந்தபல் நாட்டையும் வென்றுயர் வடைந்தான்.

       6.      மறைவ லோர்மறை முறையென வகுத்தவவ் வழியே
              நிறைய வேள்விகள் செய்துமன் னார்குடி நிறையக்
              குறைவி லாப்பொருள் கொடுத்துமே குறுநில மன்னர்
              திறைகொ டுத்திறை யாக்குபே ரரசனாய்த் திகழ்ந்தான்.

       7.      இன்ன வாறவன் பெரும்பொருட் கிறைவனா யெழிலார்
              துன்னி யின்னலச் சுவைதர வின்பினிற் றோய்ந்தும்
              அன்ன மென்பணைக் கோசல நாட்டிறை யாயும்
              மன்னர் மன்னனாய்த் தசரதப் பெயரொடு வாழ்ந்தான்.

       8.      அருமை யானபே ரரசனா யடைந்துசிற் றரசர்
              பெருமை யாகவே வணங்கிட வுளமகிழ் பெருக
              ஒருமை யானசிற் றரசரின் மருகனென் றோதும்
              உரிமை வாழ்வினை யிழிவென வெறுத்திடு முளத்தான்.

       9.      வடிவ மங்கையர் பலருட னிருவரை மணந்தும்
              அடிய சைந்துடல் தளர்கிழப் பருவம தடைந்தும்
              படியி லேதனை யொத்தவோர் மன்னவன் பயந்த
              கொடியை வேட்டிட வேண்டுமென் றுளத்திடைக் குறித்தான்.

       10.     குறித்த கொள்கையை முடித்திட மனத்திடைக் கொண்டு
              செறித்த பல்வளஞ் சேர்ந்தநா டனைத்தினுந் தேடிப்
              பறித்த முல்லையில் வண்டெழுந் தின்னிசை பாடும்
              மறித்த வேல்விழிக் கேகயன் கொடியென மதித்தான்.

       11.      உள்ள வாறவன் எண்ணிய படியமைந் துளத்தைக்
              கொள்ளை கொண்டதக் கேகயன் கொடியெனக் கொண்டே
              அள்ளு மொய்வளக் கேகய மன்னனை யண்மிக்
              கிள்ளை மென்மொழிப் பாவைகை கேசியைக் கேட்டான்.
-------------------------------------------------------------------------------------------
       11. மொய் - நிறைந்த.