12. கேட்ட மன்னவன் நாணுறக் கேகயன் கிளப்பான் வேட்ட பல்வகை வேள்வியாற் பெரும்புகழ் வேய்ந்த கோட்ட மில்மனக் கோசல நாட்டுயர் கோனே வாட்ட டங்கருங் கண்ணியைக் கொடுத்திட மறுக்கேன். 13. மன்னர் மன்னவ வுனையலால் கங்கைபாய் மண்ணில் பின்னர் யாருளர் என்மகட் குரியவர் பேசில் இன்னு முன்னருந் திறலினுக் கேற்றவ ளெனது கன்னி யென்பதை யறிந்தவட் கொடுப்பதென் கடனே. 14. சுருண்ட மென்குழற் செய்யவாய்க் கருவிழித் தோகை இரண்டு பேர்களை மணந்துளாய் இருக்கினு மென்றன் மருண்ட மான்விழி மங்கையக் குறுநில மன்னர் இரண்டு பேர்பெறுஞ் செல்வமென் பதிற்றடை யென்னே. 15. மன்னர் மன்னவ என்குலக் கொழுந்தினை மதித்தே அன்ன ரோடொரு நிகருறக் கொடுத்தலு மழகோ பின்னு மூத்தவள் பிள்ளையன் றோமுறை பிழையா மன்ன னாகுவன் கோசலை யாண்டிட மதிப்பாய். 16. பெருமை யின்றியும் பெற்றெடுத் திடுமுதற் பிள்ளைக் குரிமை யின்றியும் மனைவியென் றழைத்திட வுனக்கென் அருமை யாய்வளர்த் தென்குலம் விளக்குமென் னன்பை இருமை மேற்கொடுத் திடேனெனக் கிளந்தன னேந்தல். 17. இன்ன வாறுகே கயனவ னெதிர்மறுத் திடவே உன்னு மோர்பொருள் கைவரப் பெற்றிடா வொருவன் என்ன வேதச ரதனொரு துணிவிலா தினைந்து பொன்னை யெவ்வகை யடைகுவே னெனமனம் புலம்பி. 18. யாது சொல்லினு மதன்படி நடக்குவே னிலவப் போதை வென்றவாய்க் கொடியிடை வரிசிலைப் புருவச் சூத மென்றளிர்க் குளிருடல் தளிரடிச் சுவைத்தேன் மாதர் மெல்லியல் தனைக்கொடுத் தென்குடி வளர்ப்பாய். 19. கரிச னத்துடன் தசரத னிவ்வகை கழற அரச கேட்டியுன் சொற்படி முடிக்குவை யாயின் வரிசை யாகவுன் கோசல நாட்டையென் மகட்குப் பரிச மாகவின் றேதரின் மணமுமப் பரிசே. ------------------------------------------------------------------------------------------- 12. வாள் தடம் கண் - வாள் போன்ற பெரிய கண். 16. இருமை மேல் - இரு மனைவிகளிருக்கப் பின்னும். 17. இனைந்து - வருந்தி. 18. சூதம் - மாமரம் | |
|
|