பக்கம் எண் :


இராவண காவியம் 285

   
         21.   விழுமிய கதிர்வாள் கொண்டு வெட்டியே வீழ்த்தப் பட்ட
              கொழுவிய குதிரை தன்னைக் கோசலை யந்தக் கங்குல்
              முழுமையுங் கணவ னோடு முயங்கிடு முறையே போலத்
              தழுவியே கழித்தாள் மற்றைச் சடங்கெலா முடிந்த பின்னர்.

         22.   வெட்டிய குதிரை யோடு வேறுபல் குதிரை தம்மை
              வெட்டியே காய்ந்த நெய்யில் வேகவைத் தெடுத்து நன்னெய்
              சொட்டிடப் பகிர்ந்தெல் லோருஞ் சுவைபட மென்று தின்று
              அட்டிய சோமக் கள்ளை யருந்தியே களித்தா ரம்மா.

         23.   ஆங்குள முந்நூ றாவும் ஆடுபன் னூறும் பாம்பும்
              தேங்குநன் னீர்வாழ் யாமை முதலிய சிலபன் னூறும்
              தூங்கிறைப் புள்ளின் கூட்டத் தொகைவகை விரியிற் கொன்று
              பாங்கொடு பொறித்துத் தின்று பருகினார் சோமக் கள்ளும்.

         24.   இங்ஙனம் பலநாள் செல்ல இருந்தவர் புலவுங் கள்ளும்
              நுங்கியே களித்தார் வேள்வி நூனெறிப் படியே மன்னன்
              மங்கைமூ வரையும் வேள்வி வகுத்தவா சான்மூ வர்க்கும்
              அங்கையிற் பிடித்து வேள்விக் காணிக்கை யாகத் தந்தான்.

         25.   முனிகலைக் கோட னோடு மூவரும் மூவ ரோடு
              கனிமொழி பேசிக் கூடிக் கலந்தனர் கருப்பங் கொள்ள
              அனையவர்க் கீடாப் பொன்கொண் டரசன்பால் விடுத்துச் சென்றார்
              மனைவியர் பெறுநா ளாக மக்களைப் பெற்றா ரம்மா.

         26   நங்கைகோ சலையா மானும் ராமனென் பானைப் பெற்றாள்
              மங்கைகை கேசி பெற்றாள் பரதனை மற்றோர் மின்னாள்
              தங்குலக் குமண னோடு சத்துருக் கனையும் பெற்றாள்
              மங்கல மாக நான்கு மக்களும் வளர்ந்து வந்தார்.

         27.   வளர்ந்தனர் தவழ்ந்தி ருந்து மணிநடை பழகி யோடித்
              தளர்ந்தமென் னடையி னீங்கித் தகுங்கலை பயின்று பின்னர்
              அளந்தறி யரசக் கல்வி யடங்கக்கற் றாண்மை யெய்தி
              இளந்தளிர் முதிர்ந்து காளைப் பருவமுற் றிருந்தா ரம்மா.