பக்கம் எண் :


286புலவர் குழந்தை

   
5. தாடகை கொலைப் படலம்
 
        1.     நாடிய குதிரை வேள்வி நடத்தியே யயோத்தி மன்னன்
              தேடிய நான்கு பிள்ளைப் பேற்றினைத் தெரியக் கண்டாம்
              தாடகை யெனும்பேர் பெற்ற தமிழமூ தாட்டி தன்னைக்
              கோடிய சிலையி ராமன் கொன்றதோர் கொடுமை காண்பாம்.

        2.     தன்மதி யமைச்ச ரோடு தசரதன் தன்றன் மக்கள்
              நன்மண வாழ்வு பற்றி நாடியாங் கிருக்கும் போது
              கன்மன முடைய பாவி கவுசிகன் வரவே மன்னன்
              தொன்முனி வருக வென்று தொழுதுநல் லிருக்கை தந்தான்.

        3.     மன்னவன் முனியை வந்த வரவினை வினவ அன்னான்
              மன்னவ வுனது மைந்தர் நால்வரில் வலியோ னான
              முன்னனை யனுப்பி யான்செய் முதுமறை வேள்வி தன்னை
              இன்னலி லாது காப்பாய் எனவிறை யுள்ளஞ் சோம்பி.

        4.    அருமறை முனிவ மக்கள் நால்வரில் அவனே யென்றன்
              பெருகிய வுள்ளத் தன்பைப் பெற்றுளான் பிரிந்தன் னானை
              ஒருநொடி தரியேன் வேள்விக் கூறுசெய் குநர்யா ரென்னத்
              திருகிய மனத்தான் மன்ன செந்தமி ழகத்தை யாளும்.

        5.     இறைமகன் இலங்கை வாழும் இராவணன் விந்தங் காக்க
              நிறுவினான் கொடிய ரான சுவாகுமா ரீசன் என்னும்
              வெறியரை அவர்கள் யானும் வேள்விசெய் திடவி டாமல்
              இறுவரை வந்து வந்து தடுத்தன ரெனவே மன்னன்.

        6.     இந்நிலத் தனிலே யந்த இறையிரா வணன்முன் நிற்கும்
              மன்னவ ருளரோ யானும் வலியனோ அவன்முன் நிற்க
              அன்னவ னுடனே யன்னான் அடல்வலி மறவ ரோடும்
              முன்னுற வெதிர்க்க வென்னால் முடியவே முடியா தையா.

        7.     ஆகையால் எனது மூத்த அழகனை யாங்குங் கூட்டிப்
              போகயா னனுப்பேன் வேள்வி தடுத்திடும் பொறியி லாச்சு
              வாகுமா ரீசன் என்பார் தமிலொரு வரினோ டேயான்
              ஓகையி னொடுபோர் செய்ய உம்மொடு வருவே னென்றான்.
-------------------------------------------------------------------------------------------
        5. இறுவரை - கடைசி வரை. 7. ஓகை - உவகை.