பக்கம் எண் :


இராவண காவியம் 287

   
         8.    வருமுனி சினப்பக் கண்ட வசிட்டன்மன் னவனை நோக்கிப்
              பெருமகன் றனக்கு நல்ல பேறிவர் வரவ தாகும்
              ஒருமன முடனே மன்ன உடன்செல வனுப்பு கென்ன
              திருமகன் இளையா னோடு செம்மலை யழைமி னென்றான்.

         9.    ஏவல னொருவன் அன்னான் இருப்பிட மதனை யண்மிக்
              காவல னழைத்தா னும்பி யுடனெனக் கழற வென்னென்
              றாவல னாகத் தம்பி யவனொடுங் கடிதிற் சென்று
              மேவல னாக வுள்ளான் வேத்தவை யடைந்தி ராமன்.

         10.   தந்தையை வணங்க மைந்த தவமுனி யுடனீ யேகி
              விந்தநா டடைந்து வேள்வி காத்திவண் மீள்வா யென்ன
              எந்தையே யிதோசெல் கின்றே னெனவடி தொழுது பொல்லா
              வெந்தொழில் புரியப் பாவி விடைகொடு புறப்பட் டானே.

         11.   விடைகொடு கொலைவில் ராமன் வெந்தொழில் புரிவான் வேண்டி
              நடைகொடு பெயரத் தம்பி இலக்குவன் நலிதந் தூரைச்
              சுடுமெரி யதனுக் குற்ற துணையெனக் கொலைவில் லேந்தித்
              தொடர்தரு கொடு்ங்கால் போல அண்ணனைத் தொடர்ந்து சென்றான்.

         12.   தானெனத் தருக்கிக் கோசி தன்னொடுந் தம்பி யோடும்
              மாநக ரயோத்தி நீங்கி மலைகளுங் காடு நீந்தி
              வானையூ டுருவிச் செல்லும் மரமடர் விந்தச் சாரல்
              தானடைந் ததையுந் தாண்டித் தமிழகச் சாரல் கண்டார்.

         13.   ஈங்கிவர் சிலநா ளேகி இடைவள நாட்டைக் கண்டு
              மாங்குயில் கூவப் பூவை வண்டமி ழிசைத்தேன் வாக்கும்
              ஓங்கிய மரங்கள் சூழ்ந்த வொருமலர்ப் பொழிலிற் றங்கிப்
              பாங்குட னியற்கைச் செந்தேன் பருகியாங் கிருக்கும் போதில்.

         14.   ஆரிய முதியோர் தம்மா லரியவிற் றொழில்ப யிற்றி
              ஆரிய வடிமை யாக்கி யருந்தமி ழரசைப் போக்கி
              ஆரிய வடிமை யின்கீ ழருந்தமி ழகத்தை யாக்கி
              ஆரியர் வாழ்வ தாக வாக்கவே யாக்கப் பட்டான்.
-------------------------------------------------------------------------------------------
         11. கால் - காற்று.