பக்கம் எண் :


288புலவர் குழந்தை

   
         15.   இயக்குந ரியல்பிற் கேற்ப இயங்கிடும் பொறியே போல
              இயக்குமா ரியமுன் னோரி னியல்புபோ லியங்கு நீரான்
              பயக்குறை யொன்று மின்றிப் பகையின்றிப் பெண்ணென் றாலும்
              தயக்கமில் லாது கொல்லுந் தசரத ராமன் எந்தாய்.

         16.   சந்தடர் விந்தச் சாரல் தனையிரு கண்ணால் கண்டு
              மைந்தனு மகிழ்ந்தே னோவாப் பல்வகை வளங்கள் மேய
              இந்தநன் னாட்டை யாள்வோர் யாரவர் வரலா றென்ன
              விந்தக மெவர்க்குச் சொந்தம் விளக்கமா யுரைப்பீ ரென்றான்.

         17.   அடிமையிவ் வாறு கேட்ப அவாவழுக் காறு சீற்றம்
              மடமைசெந் தண்மை யின்மை வஞ்சனை முதலா வுள்ள
              கொடுமைக ளெல்லா மொன்றாய்க் கூடியோ ருருவ மாகிப்
              படிமிசை வந்தா லன்ன பாவியாண் டானுஞ் சொல்வான்.

         18.   திண்டிற லரண மேய திரைகட லிலங்கை வாழும்
              எண்டிசை புகழுங் கொற்றத் திகலிரா வணனென் மைந்த
              வண்டமிழ் மக்கள் தங்கள் மாபெருந் தலைவ னாகத்
              தண்டமி ழகத்தை முற்றுந் தனியர சோச்சு கின்றான்.

         19.   நம்மவர் வாழ்வு காண நைந்துளம் புழுங்கி நொந்து
              தம்மெனத் தருக்கி வாழும் தமிழகத் தலைவன் மைந்த
              செம்மையு மருளு மன்புஞ் செறிவொடு பொறையு நண்பும்
              இம்மியு மில்லான் பொல்லா னிறைக்குணஞ் சிறிதும் புல்லான்

         20.   மைந்தகேள் நம்மோர் தங்கி வாழ்ந்திடும் வளமை மிக்க
              இந்தநல் விந்தச் சாரல் வேண்டுமென் றேபொய் யாகச்
              செந்தமி ழகத்தைச் சேர்ந்த தென்னவத் தென்னா டாள்வோன்
              வெந்திற லொருத்தி காப்பின் வீரரை யமர்த்தி யுள்ளான்.

         21.   அன்னவள் சுகேது வென்னும் அருந்தமி ழரசன் செல்வி
              மன்னிய வுலகை நீத்த சுந்தனின் மனையா ளாவாள்
              இன்னெறி யில்லாள் பெற்ற மைந்தன்மா ரீச னென்பான்
              தன்னொடுஞ் சுவாகு வென்னும் தானையந் தலைவ னோடும்.
-------------------------------------------------------------------------------------------
         16. ஓவா - குறையாத