22. இருவள முடைய விந்த இடைவள நாட்டை யாண்டு வருகிறாள் இரக்க மில்லாள் வலிமிக வுள்ளாள் பொல்லாள் கருவிலே பகையை நன்கு கற்றனள் போலும் மைந்தா உருவிலே பெண்பா லன்றி யுணர்விலே யாண்பா லாவாள். 23. ஆடவ ராவத் தக்க ஆண்மையு மடடா நம்மைச் சாடியே துரத்திப் போக்கும் சலமது முள்ளாள் பொல்லாத் தாடகை என்னும் பேராள் தறுகணும் தளரா முன்பும் கூடியே யுள்ளாள் அன்னாள் கொடுமையை யென்னென் கோயான். 24. அன்னவள் நம்மோ ரிங்கண் அடைதரப் பொறாதா ளாகி இன்னல்கள் பலவுஞ் செய்தே எதிர்ப்பவர் தம்மைக் கொன்றும் தன்னல முடையாள் தங்கள் தாயக மெனவே நம்மோர் துன்னுதல் கூடா தென்று துரத்தினா ளெனையுங் கூட. 25. ஆதுமட் டுமன்றி யாஞ்செ யருமறை வேள்வி தன்னைத் தீதெனச் சினந்தே யன்னாள் செய்யவொண் ணாது செய்தாள் ஆதலா லடைந்தங் குன்னை யழைத்துவந் தனன்கா ணென்ன ஈதெனின் கடமை யென்றே யிகலியாங் கிருந்தா ரம்மா. 26. ஆயிடை யவர்க ளிவ்வா றளவளா விருக்கப் பெற்ற தாயினு மிகுந்த வன்பிற் றமிழரைக் கண்போற் காக்கும் சேயுளம் படைத்த செல்வத் தேவியு மந்நாள் மாலை கோயிலை நீங்கி மின்னார் குலவிட வுலவச் சென்றாள். 27. முயற்கையி லிருந்து கீழ்வாய் முந்திரி யேனுந் தப்பா அயிற்கைய ரருகி லாம லரசியு மருமை யான இயற்கையி னியல்பு தன்னை யிருகணுங் குளிரக் கண்டே செயற்கையி னியலார் சூழச் சென்றன ளவர்கள் பக்கம். 28. சோலையிற் றோழி மார்கள் சூழ்தரக் கனியோ டாவின் பாலையு மின்னா வென்னப் பழித்தசெந் தமிழ்த்தாய் செல்லும் காலையங் குலவி வந்த கருந்தொழி லாளன் கண்டிவ் வேலைபோ லென்று மேற்ற வேலையீங் கமைதல் இல்லை. ------------------------------------------------------------------------------------------- 23. சலம் - தீராச்சினம். தறுகண் - அஞ்சாமை. முன்பு - வலி. 27. முயற்கை - முயற்சி. முந்திரி - கால் காசு. கீழ்வாய் - கீழ். அயில் - வேல். | |
|
|