29. என்றவ னிருண்ட நெஞ்சி லெண்ணியே யயோத்தி ராமன் நின்றவவ் விடத்தை நண்ணி நினைத்ததை முடிக்க வல்லோய் சென்றியாம் தேடும் செல்வம் தேடிவந் ததுவே நம்மை ஒன்றிடி லதனிற் போக்கி யுறுபயன் வேறொன் றுண்டோ. 30. என்னவே யிராமன் எந்தாய் என்னென மைந்தா வீங்கு துன்னிடா தெம்மை முன்னந் துரத்தியே காவல் காக்கும் அன்னவள் படையொன் றின்றி யதோசெலு கின்றாள் பாரும் தன்னினப் பெண்க ளோடும் தனித்துமே விடுமான் போல. 31. இதைவிட அவளைக் கொல்லற் கேற்றதோர் காலம் வாய்த்தல் மதிவலி மிக்கோ யில்லை பெண்ணென்று மயங்கல் வேண்டா எதிரிக டம்மி லாண்பெ ணென்றவேற் றுமையொன் றில்லை அதிகுர லிடியே றன்னாள் அதோபெயர் கின்றாள் பாரும். 32. என்றவக் கொடியோன் சொல்லை இறைக்குணஞ் சிறிது மில்லான் நன்றெனக் கொண்டு மேலோய் நாடிலே னடியே னீதோ சென்றவ ளுயிரைக் கொண்டு திரும்புவே னெனவே யங்கு நின்றதன் தம்பி யோடு நெறியிலான் நிமிர்ந்து சென்றான். 33. இம்பரிற் போந்து நம்மோர் இருந்திடா திடைஞ்சல் செய்யும் வம்பிபெண் ணாகை யாலே மனம்வர வில்லை கொல்ல எம்பியக் கொடியாள் காதோ டெள்மல ரனைய மூக்கை அம்பினா லறுத்திங் கேநின் றகற்றிட நினைக்கின் றேன்காண். 34. சீரிலா னின்ன கூறிச் சிலையைநா ணேற்றித் துண்ணென் றாரவா ரங்கள் செய்தான் அவ்விடை யுலவிச் செல்லும் போரணி பூணா வன்னை பொள்ளெனத் திரும்பிப் பார்த்தே யாரவர் வடவர் போலென் றணுகினாள் அணுக வந்தோ. 35. கைகளை யறுத்தான் மூத்தோன் காதொடு கமழு மூக்கை ஐயகோ இளைய காவி யறுத்துள மலறச் செய்தான் எய்யென மூத்த பாவி யேவினா லாவி கொண்டான் பொய்யென வுடலம் மண்மேல் பொத்தென விழுந்த தம்மா. | |
|
|