பக்கம் எண் :


இராவண காவியம் 29

   
     எப்படி இராவணன் கல்விகற்ற பாங்கு! நெஞ்சம் மறவாப் பாடல்களாக இவை
கொஞ்சி மகிழவில்லையா?

     அடுத்து, இராவணன் மண்டோதரியான வண்டார் குழலியைக் காணும்போது, புலவர்
குழந்தையின் துள்ளலோசைப் பாடல்கள் முகிழ்ப்பதைப் பார்ப்போம்:
  தண்டாமரை மலரோகனி
     தமிழோதமி ழகமோ
உண்டோர்மன முள்ளூற
     வுவக்குந்தெளி தேனோ
கண்டோகனி யோவேறெது
     காணோமென வேதான்
வண்டார்குழல் என்றேபெயர்
     வைத்தார்மன மொத்தே!

என்றும்,

பாவைக்குல மெல்லாமவள்
     படிமைக்குற வாடும்
கோவைக்குல மெல்லாமவள்
     குதலைக்கிடை நாடும்


காவிக்குல மெல்லாமவள்
     கண்ணுக்குற வாடும்
பூவைக்குல மெல்லாமவள்
     புள்ளுக்குல மாகும்!

என்றும்,

புள்ளுக்குல மெல்லாமவள்
     பூவைக்குழல் கூடும்
எள்ளுக்குல மெல்லாமவள்
     இமைகட்கிடை நாடும்
வள்ளைக்குல மெல்லாமவள்
     அள்ளுக்குற வாடும்
கிள்ளைக்குல மெல்லாமவள்
     கிளவிக்குல மாகும்.
    என்றும் பாடிக் காட்சிப் படலத்தை நம் கருத்தில் பதித்துவிடுகிறார். இவ்வாறு
பாவின் தரத்திலும், கதையின் அமைப்பிலும் நூல் சிறந்தோங்குகிறது.