பக்கம் எண் :


இராவண காவியம் 299

   
கலித்துறை
 
          14.  பணிசெய் வோர்களும் பாங்குடை யோர்களும் பார்க்கின்
              அணிசெய் காதல ராவரோ மாதருக் கலவும்
              பிணிசெய் காரண மாமெனப் பேசியாங் கிருப்ப
              மணிசெய் மண்டபம் வந்துநின் றொற்றர்கள் வணங்கி.

          15.  மன்னர் மன்னவ வாழ்கவவ் வாரிய வஞ்சர்
              இன்னல் செய்தனர் என்றனர் இன்னலென் னென்ன
              அன்னை போன்றதா டகையென ஆம்நம தன்னைக்
              கென்னை யென்றனன் கொன்றனர் சென்றன ரென்றார்.

          16.  என்ற சொற்செவி புகாமுன மிடியென வார்த்துக்
              கொன்ற புல்லரைக் கொன்றில ரோகொடி யாடும்
              முன்றில் காவலர் மறங்கடை நின்றரோ மூடர்
              பொன்றி னாரில ரேலிதோ போக்குவே னாவி.

          17.  என்று சீறியே இகலரி யேறுபோ லெழவே
              வென்றி வேலவ காவிடைத் தனிவரும் வேளை
              நன்றி லாவட வயோத்திவாழ் தசரத ராமன்
              கொன்ற தோடமை யாதுசு வாகையுங் கொன்றான்.

          18.  கேள்வி வல்லவ மொழிதர வின்னமுங் கேட்டி
              கோள்வ லம்படு கோசிக னெனுமுனி குறுகி
              வேள்வி செய்தனன் தடுத்திட அயோத்தியை மேவி
              வாள்வ லம்பட ராமலக் குவரொடு வந்தே.

          19.  தனித்து லாவிய தாடகை யாந்தமிழ்த் தாயைப்
              புனத்து மானினைப் போலவே வன்கொலை புரிந்து
              மனத்து நேர்வொடு செய்புலை வேள்வியை மறுக்கச்
              சினத்து ராமனச் சுவாகுவி னுயிரையுஞ் சிதைத்தான்.


          20.  எதிர்த்தல் இன்றுநன் றலவெனத் தெளிந்தமா ரீசன்
              அதிர்த்த வுள்ளமோ டாயிடை நின்றுமே யகன்றான்
              கொதித்த நெய்யிடை வெந்தவூ னுண்டுடல் கெழுக்கச்
              சிதைத்த ராமலக் குவரொடும் முனிவனுஞ் சென்றான்.

          21.  என்ன மன்னவர் மன்னவ னெரிசினங் கனன்றே
              இன்ன ரோபசுந் தமிழக மெங்கணு மினிமேல்
              துன்னு மாரியப் பூண்டிலா தடியொடு தொலைத்தே
              இன்னை யேபழிக் குப்பழி வாங்குவே னென்றான்.
-------------------------------------------------------------------------------------------
          18. கோள் - கொலை. வாள்வலம் - தமிழர்.