24. வருந்தலை யுன்மகட் கேற்ற மாப்பிள்ளை விருந்தின னாகவுன் வீட்டி லுள்ளனன் அருந்திற லினனிதை யறியின் ஆவலாய் மருந்தினை யீயுமுன் மனத்து நோய்கெட. 25. மன்வன் தோன்றலோ என்ன மாமுனி பின்னெவன் ராமனென் பேச்சைத் தட்டிலான் இன்னையே யவ்விலை வளைத்துன் ஈர்ங்குழற் பொன்னினைத் திருமணம் புணரச் செய்குவன். 26. அஞ்சலை திருநக ரயோத்தி ராமனும் வஞ்சியுந் திருமண மக்க ளாகுதல் கொஞ்சமு மையமில் லென்னக் கோசிகன் உய்ஞ்சன னெனவடி வணங்கி யொள்ளியான். 27. நற்றவ தென்றமிழ் நாட்டுப் பெண்கொலை மற்றொரு பெண்ணினை வாழ வைத்தது பெற்றனன் மருகனைப் பிழைத்த ளென்மகள் உற்றிடும் பழியினை யொழித்து வாழ்ந்தனன். 28. துரிசினில் என்மனத் துயரம் பாழ்படக் குரிசிலை நல்வினை கூட்டி வந்தது வரிசிலை ராமனை மருக னாய்ப்பெறும் பரிசினை யடைந்ததுன் பரிசி னாலென்றான். 29. மறித்தொரு முறையவன் வணங்கி மாதவ குறித்ததை முடித்துமென் குலத்தைக் காக்குவாய் பறித்தமுல் லையைமணம் பார்க்கப் பைங்குழல் செறித்திட நினைப்பது சிறுவர் செய்கையோ. 30. என்குறை தீர்ந்திட இயன்ற விந்தநாள் நன்குற இருவர்க்கும் நல்ல தாகுக பொன்குறை யிலையணிப் பொதியைத் தாங்குமென் மின்குறை யேயென விளம்ப மாமுனி. 31. நம்பியைக் கேட்டியான் முடிப்பல் நன்றெனத் தும்பியந் தொடையணல் தொழுது நன்றென அம்பெறிந் தொருதமி ழணங்கைக் கொன்றவன் எம்பியோ டிருந்திடு மிருக்கை யெய்தினான். ------------------------------------------------------------------------------------------- 28. துரிசு - துருசு - விரைவு. | |
|
|