54. முறையொடு பல்லிய முழங்க வொல்லென மறையவ ரருமறை யோத மங்கலப் பொறையுடன் மெல்லியர் பொருந்த வந்துமே இறைமக னெதிர்வர வேற்றுச் சென்றனன். 55. தந்தையோ டீன்றநற் றாயர் தாள்களை வந்துமே பணிவுடன் வணங்கி நின்றதம் மைந்தரைத் தசரதன் தழுவி மைந்தர்காள் உய்ந்தன மெனவுவந் தொருங்கு சென்றனர். 56. சமைந்துள விடுதியிற் சென்று தங்கியே அமைந்துள மணவிருந் தருந்தி யன்புடன் குமைந்தவில் நிகழ்வினைக் கூறிக் கொண்டனர் சுமந்திரன் ஆவண துருசிற் செய்தனன். 57. கருமனக் கோசிகன் காலைப் போற்றியென் குருமொழிப் படியுடன் கூட்டி விட்டது மமக ளோடுமென் மைந்த ரைப்பெற ஒருநல மானதென் றுவந்தி ருந்தனன். 58. தும்பியந் தொடைக்குசத் துவச னாயதன் தம்பியை யழைத்தனன் சனகன் தூதரால் எம்பியு மிதிலையை யெய்தக் கோசலை நம்பிவில் லிறுத்ததை நவின்று வந்தனர். 59. மேதிகண் படுவயல் மிதிலைக் கோமகன் மாதரை மன்னனை யழைத்து வாவெனத் தூதனை யனுப்பினான் தூதன் போய்ச்சொல மாதவ ரோடுமா மன்னன் வந்தனன். 60. மற்றவர் வந்ததும் வசிட்டன் இற்றெனச் சொற்றனன் ராமனைத் தொடர்ந்து முன்னவர் உற்றதோர் கொடிவழி உவந்து தன்வழி இற்றெனச் சனகனு மியம்பி னானரோ. 61. கொடிவழி கூறிய பின்னர்க் கொற்றவ துடியிடைச் சீதையை மூத்த தோன்றற்கும் வெடிமலர்க் குழலியூர் மிளையைப் பின்னற்கும் கடிமணம் புரிந்திடக் கருத்துட் கொண்டனன். | |
|
|