| வம்புக்கு வந்தாளோ மாபாவீ! யுன்கொடிய அம்புக்கு வேறிடமின் றாயதோ வன்றியுனை நம்பிக்கை காட்டி நலங்கொண் டகன்றாளோ? கம்புக் கதிரிருக்கக் காழி பிளந்தாயே! |
என்று வரும் உருக்குலை படலப் பாடல்கள் உண்மையிலேயே நம் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விடுகின்றன. இதன் பிறகு, சீதை, தமிழர் போர்முறைப்படி இலங்கைக்குக் கொண்டுவரப்படுகிறாள். இராமன் தன் ஆரியப் படையொடு தெற்கு நோக்கி வருகிறான். பீடணனோடு கள்ள நட்பு ஏற்படுகிறது. போருக்குமுன் இராவணன் சபை கூடுகிறது. அங்கு போர் எழுச்சிப் பாடல்கள் எரிமலை வெடித்துக் கக்கும் தீப்பிழம்பாகவே மாறிவிடுகின்றன. சேயோன் (இந்திரசித்) பேசுகிறான். |
| அத்தைக்குச் சினைகொன்று பகைதேடிக் கொண்ட அறிவற்ற கொலைகார வடவோரை யீதோ குத்துக்குப் பலநூறு குமுறுக்குப் பலவாக் குலைவிண்ட தெங்கென்னத் தலைகொய்து வருவேன் முத்துக்கு வளையேறி முகம்வைத் துறங்க முருகத்த னையுமுள்ள முருகப் படிந்து தித்திக்குந் தேனுண்டு வரிவண்டு பாடும் செந்தா மரைப்பொய்கை சூழ்பண்ணை நாடா! அப்பாநீ யிப்போதோ போவென்று சொன்னால் அறிவற்ற வடவோரை யொருசுற்றி லேயே தப்பாமற் கழுகுண்ண விரையாகத் தருவேன் தந்தேயுன் திருமுன்னர் விரைந்தோடி வருவேன் ஒப்பேது மில்லாது திசையெட்டுந் தேடி ஒளிமிக்க கதிரோனும் உறவுக்கு நாட எப்போது மனமொப்ப தெனமிக்க வாடி எதிரின்றித் தனிநிற்கு மிணையற்ற புகழோய்! |
இப்படியே பாடல்கள் செல்கின்றன. இந்தப் பாடல்களின் வெற்றிக் குறிப்பினையும் சொற்சிற்பத்தையும் தமிழிலக்கியங்களில் வேறெங்குங் காண்பதரிது. இச்செஞ்சொற் கவியின்பத்தில் மூழ்கித் திளைக்காதார் யாரே? |