பக்கம் எண் :


இராவண காவியம் 311

   
        70.    மணமுழ வதிர்ந்திட மறைமு ழங்கிட
              மணமகார் வாழ்கென மக்கள் வாழ்த்திடப்
              புணரிய தீயிடைப் பொருந்தப் பொற்புறும்
              மணவறை தனைமண மக்க ளெய்தினர்.

        71.    துன்னிய மறையவர் சொன்ன வேளையில்
              தன்னிகர் நன்மதிச் சனகன் வந்துதங்
              கன்னியர் நால்வரைக் காளை நால்வர்க்கும்
              மன்னெரி முன்னர்நீர் வார்த்துத் தந்தனன்.

        72.    நன்னுதல் சீதையை ராமன் கொண்டனன்
              கன்னியூர் மிளையைலக் குமணன் கண்டனன்
              பன்னிமா ளவியைநற் பரதன் எய்தினன்
              பின்னவன் சுதகீர்த் திதனைப் பெற்றனன்.

        73.    பல்லிய முழங்கிடப் பலரும் வாழ்த்திட
              வல்லியர் கைகளைப் பற்றி மைந்தரும்
              மல்லலந் தீவலம் வந்து மும்முறை
              நல்லியல் மனைகளில் நன்கி ருந்தனர்.

        74.    முன்னிய திருமணச் சடங்கு முற்றுற
              உன்னிய பெருவிருந் துண்டி யாவரும்
              பின்னினி தேவிடை பெற்றுச் சென்றனர்
              மன்னுகோ சிகன்பனி மலைக்குச் சென்றனன்.

        75.    பெருமதிச் சனகனும் பெண்கள் நால்வர்க்கும்
              வரிசைகள் கொடுத்துநல் வழிய னுப்பினன்
              பரிசொடு விடைகொடு நடந்து பண்புடன்
              அரசனும் மக்களோ டயோத்தி சேர்ந்தனன்.

        76.    சேர்ந்தினி தயோத்தியி லிருக்கச் சில்பகல்
              வேந்தனும் பரதனை விளித்துன் மாமனும்
              போந்துளன் அழைத்துனைப் போகப் பாட்டனும்
              வாய்ந்துனைப் பார்த்திட மனக்கொண் டுள்ளராம்.

        77.    என்றவன் கூறவே பரதன் எந்தையே
              இன்றையே செல்கிறே னென்று மாமனைத்
              துன்றியே இளையசத் துருக்க னோடவன்
              சென்றுமே கேகய நாட்டைச் சேர்ந்தனன்.