8. தசரதன் சூழ்ச்சிப் படலம் | அறுசீர் விருத்தம் | 1. வளைமுரல் பழனஞ் சூழ்ந்த வளநக ரயோத்தி மன்னன் உளவினை யறியான் பாவம் உள்ளத்தாற் கள்ள மில்லான் கிளையினை நீங்கிப் பாட்டன் கேகயன் றன்னைப் பார்க்க இளையனோ டிளையாள் செல்வன் ஏகிய பின்னர் மன்னன். 2. மட்டவி ழலங்கன் மார்பன் மக்கள்நால் வரிலே ராமன் கட்டழ கதனி லீடு பட்டுமுன் கைகே சிக்குக் கொட்டடிப் பரிச மாகக் கோசல நாட்டை யீந்து விட்டதை யெடுத்துக் கூறி வெம்பிடு மவனைத் தேற்றி. 3. கெடுத்தனன் காமப் பித்தாற் கேகயன் மகட்கு நாட்டைக் கொடுத்தனன் அதனை மீட்டுக் கொடுத்துனை யரச னாக்க அடுத்தனன் பெரிதோர் சூழ்ச்சி பரதனை யதற்கே நாடு கடத்தினன் மைந்தா உள்ளக் கருத்தினை யுரைப்பக் கேளாய். 4. உடையவன் ஊரி லில்லா வுள்ளவிப் போதே நீயும் குடிகளுன் னிடத்தி லன்பு கொண்டிடும் படிநீ பேரன் புடையனாய் நடந்தே யன்னா ருள்ளத்தைக் கவர்ந்தா னாட்டு குடிகள்பின் உனக்கே நாட்டைக் கொடுத்திட விருப்பங் கொள்வார் 5. மாகுடி களுக்கு மாறாய் மன்னவர் மன்ன னான கேகயன் மகளோ டந்தக் கேகய னேயா னாலும் போகுதல் துணியான் பின்னர்ப் பொன்முடி நீயே கொள்வாய் ஆகையால் மைந்தா நீயும் அதன்படி நடந்து கொள்வாய். 6. இன்னமுங் கேட்டி மைந்தா என்மகன் பரதன் என்று சின்னவள் எண்ணா வண்ணம் சிந்தையைத் திருப்பி யுன்பா லன்னளென் மகனென்றுன்னை யவாவிட நடந்து கொள்ளல் பின்னவன் நெடுநா ளீங்கு பெயர்ந்திடா வழியு மாகும். ------------------------------------------------------------------------------------------- 2. கொட்டடி - சேலை; திருமண ஆடை. | |
|
|