பக்கம் எண் :


இராவண காவியம் 313

   
        7. அன்றியு முன்பால் வைத்த அன்பினுக் கடிமை யாகி
           ஒன்றிய வுரிமை தன்னை யுன்றனுக் களிப்பாள் திண்ணம்
           என்றவ னுரைப்பக் கேட்ட விரண்டக னியல்பொன் றில்லான்
           நன்றெனக் கொண்டு தந்தை மனப்படி நடக்க லானான்.

        8. ஆவதை யவாவி ராமன் அதன்படி நடக்க உள்ளம்
           நோவதை யறிவாற் றாங்கி நுண்ணிடை மகற்கு நாடு
           போவதை விலக்குஞ் சூழ்ச்சி புரிந்துவந் தனனவ் வாறே
           காவல னெண்ணம் போலக் கழிந்தது பன்னீ ரண்டே.

        9. முழுமகன் றனது சூழ்ச்சிக் குடந்தையாய் முடிவு காணும்
           இழிமகன் பழியை யஞ்சாச் சுமந்திர னென்பா னோடும்
           பழிமிகு வசிட்ட னோடும் பரதனைக் கெடுத்தற் கான
           வழியினை யாய்ந்து மூன்று மணிகளும் முடிவு செய்தார்.

        10. பின்னவன் பாட்ட னூரைப் பெயர்ந்திவ ணடையா முன்னர்
           முன்னனை யரச னாக்கி முடிபுனைந் திடுத லென்றே
           அன்னவர் முடிவு செய்தே யதன்படி முடிசூட் டற்கு
           மன்னவர்க் கோலை போக்கி வருகென அவரும் வந்தார்.

        11. கிட்டிய நாளிற் போந்த கேடெனச் சாக்குச் சொல்லி
           முட்டினி லிருந்து தப்ப முறையிலா வஞ்ச நெஞ்சக்
           கெட்டவன் சனக னோடு கேகயன் றனக்குந் தூது
           விட்டில னென்று மற்றை வேந்தர்க்குச் சாக்குச் சொன்னான்.

        12. அரசரோ டயோத்தி நாட்டுக் குடிகளு மடைய வெற்றி
           முரசினன் எழுந்தென் மக்கள் நால்வரில் முறையே மூத்த
           குரிசிலை யரச னாக்கிக் கொள்ளுவீ ரெம்மீ ரென்னச்
           சரிசரி யெனவெல் லோருந் தலையசைத் தியைவு தந்தார்.

        13. வல்லவன் எவர்க்குஞ் சீறி வருபகை யதனை வெல்லும்
           வில்லவ னயோத்தி நாட்டை விளக்கவந் தவனன் போடின்
           சொல்லவ னுண்மை யாளள் றுரிசிலன் குடிகட் கெல்லாம்
           நல்லவன் ராம னேயிந் நாட்டினுக் குரியா னென்றார்.