21. போனது மழைத்த தென்ன புகலுவீ ரெனவே மன்னன் ஆனது கேளா யுன்னை யரசனாக் கிடவே யானும் ஏனது செய்தேன் நாட்டு மக்களு மிசைய லானார் நானது தவணை யின்றி நாளையே முடிவு செய்தேன். 22. மாறுத லியற்கை யாகும் மக்களின் மனமும் நானும் தேறுத லொழியக் கூடும் ஆகையால் சிறியாள் சுற்றம் கூறுசெய் யாம லுன்றன் உறவினர் காப்பா ராக சேறிய பரத னீங்கு சேருமுன் செய்தல் வேண்டும். 23. ஆன்றவிந் தடங்கி யுள்ள அறிவர்தம் மனமு மாறும் சான்றவர் யாவ ருள்ளார் தந்நிலை தளரா ராக ஏன்றனன் பாது காப்போ டிருவென விடைபெற் றேகிக் கோன்றரு குமரன் றாயாங் கோசலை யிடத்துச் சென்றான். 24. சென்றுதா யடியைப் போற்றிச் செய்தியை யுரைப்பத் தாயும் நன்றுநீ வாழ்க உன்றன் பகைவர்கள் நசிப்பா ராகப் பின்றுத லின்றி நீயும் பேரர சதனைப் பெற்றே என்றம ரொடுசிற் றன்னை இனத்தையும் காப்பாய் மைந்த. 25. தந்தைநின் குணத்தைக் கண்டு தனிமகிழ் வடைந்தா ரென்றன் மைந்தநீ நல்ல நாளில் வந்துமே பிறந்தாய் நானும் இந்தநாள் மட்டுஞ் செய்த இருந்தவ மதுவே நிற்குத் தந்ததின் றரசை யென்று தாய்மன மகிழ்ந்து சொன்னாள். 26. அருகினி லிருந்தார்க் கெல்லா மாடையு மணியும் பொன்னும் பெருகொளி முத்த மாலை யொடுகொளப் பிறவு மெல்லாம் ஒருமுக மாகத் தந்தே யுவந்தனள் உவப்பைக் கண்ணாற் பருகிலக் குவனு மண்ணன் பக்கத்தில் வந்து நின்றான். 27. நின்றலக் குவனைப் பார்த்து நீடர செனக்குத் தம்பி உன்றனக் காக வேதான் கிடைத்துள துறுதி யாக வென்றியோ டதனை யாள வேண்டுவ துனது வேலை என்றன தரசும் நான்வாழ்ந் திருப்பது முனக்கே யாகும். 28. இன்னபல் பசப்பு மாற்ற மிசைத்தவன் விடைபெற் றேகி மன்னவ னாகப் போகும் மகிழ்ச்சியாற் தூண்டப் பட்டுத் தன்னிரு கண்ணுந் தூக்கந் தரிக்கிலான் முன்யா மத்தே உன்னிய படியே தன்னை ஒப்பனைத் திருந்தா னிப்பால். ------------------------------------------------------------------------------------------- 28. ஒப்பனைத்து - அலங்கரித்துக்கொண்டு | |
|
|