29. மணியெலா மவண பைம்பொன் மலரெலா மவண பட்டுத் துணியெலா மவண பூசுந் தொகையெலா மவண பூணும் அணியெலா மவண தீரா அவாவெலா மவண வான குணியுலாஞ் சிலையி ராமன் மனைவியர் கோலத் தம்மா. 30. மயற்படு மன்னன் சூழ்ச்சி யறிகிலாள் மகனைப் போவென் றயற்பட வாக்கிப் பெற்ற வுரிமையை யகன்றே மாற்றின் இயற்பட நிற்பாள் வீட்டைத் தவிரமற் றெல்லா வீடும் செயற்படப் புதுமைக் கோலங் கொண்டுமே திகழ்ந்த தம்மா. 31. அயலவன் மனைவி தன்னை யடைதர அவாவி யுள்ளம் மயலுற வொருவன் கூட்டி வைப்பனென் றிடவே யந்த ஒயிலினள் விரும்பத் தக்க ஒருபுதுக் கோலங் கொள்வோன் செயலினைப் போல யோத்தி செய்தது புதுமைக் கோலம். 32. உடையவ ளறியா வண்ண மொண்ணுதல் கணவற் சேரக் கடையவ ளொருத்தி கோலங் காணுதல் போல வன்ன நடையவ ளறியா வண்ணம் நன்னெறி யில்லா வஞ்சக் கொடையவ னணிய யோத்தி கொண்டது கள்ளக் கோலம். 33. பாடமை யயோத்தி யென்னும் பணிமொழிப் பாவை நாளை கூடுறும் வாழ்வுக் காகக் கோலங்கொண் டொளிறு மாற்றை மாடியி லேறிக் கண்ட மந்தரை என்பாள் மற்றோர் சேடியை வினவ வன்னாள் திருமுடி சூட்டல் என்றாள். 34. தெரியவே சொல்வா யென்னத் தெரிந்திலை யோடி யின்னும் குரிசிலா யுடைய மூத்த கோசலை மகற்கு மன்னன் கரிசனத் துடனே பட்டங் கட்டுகின் றாரா மின்று பரிசெனக் களித்தாள் நீயும் பாங்குடன் பெறச்செல் லென்றாள் 35. என்றசொற் செவிபு காமுன் எரியிடு மெழுகா வுள்ளம் கன்றியே யுருகத் துன்பக் கடலிடை வீழ்ந்தை யையோ ஒன்றிய வுயிரைப் போக்க ஒருவழி யதுங்கா ணேனே வென்றிவிற் பரதா நீயும் வீணுக்கோ பிறந்தா யப்பா. 36. கெடுத்தன னரசன் பொல்லாக் கெடுமதி யாள னுன்னை விடுத்தனன் தெருவி லந்தோ விரட்டின னாட்டை விட்டுக் கொடுத்தனன் அப்பா பொல்லாக் கோசலை மகற்கு நாட்டை முடித்தன ளரசன் றேவி மோசம்போ னாளே உன்றாய். ------------------------------------------------------------------------------------------- 29. அவண - அங்கே. குணி - வளைவு. | |
|
|