பக்கம் எண் :


இராவண காவியம் 317

   
       37.  எனவுளக் கொதிப்பி னோடாங் கிருந்துபஞ் சணையின் மீது
           புனவளத் தொடுவான் மீது புலந்தவெண் முகிலி னாப்பண்
           இனவளத் தொளிர்விண் மீனத் திடைமுழு மதியம் போல
           மனவளத் தொடுகண் டுஞ்சுங் கேகயன் மகள்பாற் சென்றாள்.

       38.  பொன்னடி பெயர்த்துச் சென்று பொருக்கென வெழுப்பிப் பேதாய்
           என்னடி யின்னுந் தூக்கம் இடரது தலைமேல் வீழ்ந்தும்
           மன்னடி யோடின் றுந்தன் வாழ்வினைக் கெடுத்தா னென்ன
           என்னடி என்று மெள்ள எழுந்திருந் தவளை நோக்கி.

       39.  அரசனென் பால்வைத் துள்ள காதலுக் களவில் என்றன்
           அருமைகொள் மகனி ராம னன்பினுக் குறையு ளாவான்
           இருவரு மிருக்கும் போதில் என்னடி இடரெ னக்குத்
           திருமுக வாட்ட மென்ன தெரிவியே னுளறு கின்றாய்.

       40.  மதிநுதல் கெட்ட காலம் வருகையி லதற்கேற் றாற்போல்
           மதிகெடு மெனவே பன்னூல் வளமுறக் கற்றுத் தேர்ந்த
           முதியவர் சொல்வா ரந்த முதுமொழிப் படிநீ யின்றோர்
           புதியவ ளானாய் வீணே போடியோ பித்தி என்றே.

       41.  எரிசினம் பொங்கி அம்மா இளவர சானான் ராமன்
           அரசனுன் னிடத்தில் நீங்கா வன்புட னுள்ளா னென்றே
           அரசிநீ புகழ்ந்து கொள்கின் றாயவன் வஞ்ச நெஞ்சன்
           கரிசன மில்லா னுன்னைக் கைவிட்டான் பொய்தொட்டானே.

       42.  உள்ளதை யுரையாய் என்ன உளறுகின் றனைபோ வென்னப்
           புள்ளின முரலுங் கூந்தற் பூவைநீ கெட்டா யுன்றன்
           பிள்ளையை விடுத்தே யன்னாள் பிள்ளைரா மனுக்கு மன்னன்
           கள்ளமா யின்று பட்டங் கட்டவே போகின் றானாம்.

       43.  ஏதிலாய் நமது வீட்டைத் தவிரமற் றெல்லா வீடும்
           சீதையி னுருவம் போல ஒப்பனை செய்கின் றார்கள்
           மீதலர் குழலாய் உண்மை மேடைமீ தேறிப் பாராய்
           ஆதலால் உனக்கு வந்த பேரிடர் அகற்ற வந்தேன்.
-------------------------------------------------------------------------------------------
       37. புனம் - வயல். ஆகுபெயராய் மலர்களை யுணர்த்துகிறது. முகில் மழைபெய்து விடுதல், புனம் வளம்பட. நாப்பண் - நடு. இனம் வளம் - கூட்டம். 43. ஏதிலாள் - அயலாள், பகைவள், அன்பிலாள், வறியள்.