44. என்னநீ கவலை கொள்ளா திருக்கிறா யெனவே பொன்னும் அன்னவன் பெறுவ துண்மை யாகவா என்னத் தோழி மின்னொளி மேனி உண்மை மேடைமீ தேறிப் பாராய் நன்னுத லுன்னைக் காக்க நான்கடன் பட்டே னென்றாள். 45. அங்கது கேளா முன்னம் அகமொடு முகம லர்ந்தே இங்கவன் பெற்ற செல்வம் யான்பெற்ற செல்வ மாகும் நங்கைநற் செய்தி சொன்னாய் நல்லவள் இந்தா வென்று மங்கையோர் ஒளிர்வெண் முத்த மாலையைக் கழற்றித் தந்தாள். 46. நித்திலக் கோவை வேறா நினைவிலாய் எனவே ஆம்பல் முத்தினை மென்று தின்று மோசம்போ கின்றாய் போடி பித்திநீ கெட்டாய் பெற்ற பிள்ளையோ டெனையுங் கூட்டிப் பொத்தெனப் பாழ்ங்கிணற்றிற் போய்விழப் பார்க்கின் றாயே. 47. உள்ளத்தில் வியர்வை சொட்ட ஒழிவிலாத் துயர மென்னும் வெள்ளத்தில் வீழ்ந்து மீண்டு மேலெழு முடியாள் செவ்வாய் வள்ளத்தி லிருந்து துன்ப மொழிகளை வாரி வாரிப் பள்ளத்திற் பாயு நீர்போற் பாவைசெஞ் செவியிற் பெய்தாள். 48. வஞ்சிநீ மிகவும் நல்லள் மனத்தினும் வெள்ளைச் சோளம் வஞ்சகன் உனது காதல் மன்னனுன் காலைக் கட்டிக் கெஞ்சுவன் ஆகு மட்டும் கெட்டவன் ஆன பின்னர் மிஞ்சின நீரைக் கூட வெறுநிலத் தூற்று வானே. 49. அரசிநீ யவனை நம்பி அருந்துயர் படப்போ கின்றாய் கரிசன முடையா னுன்னைக் கலந்துசெய் தானோ இல்லை அரசது பெறுவே னென்ன அன்னைக்குச் சென்று சொன்ன குரிசிலுன் னிடத்தில் வந்து கூறினா னில்லை கண்டாய். 50. கொற்றவன் சூழ்ச்சி யாலக் கோசலை மகனிந் நாட்டைப் பெற்பின் அவளுன் னோடு பேசவு மாட்டாள் என்றன் முற்றிழை நல்லாய் செல்வ முழுதுமன் னவள்கைக் கொண்டு சுற்றம முறவுங் கூடித் துய்க்கும்போ தென்செய் வாய்நீ. 51. வாசலை நாடி வந்த வறியவர் தமக்கோர் காசுங் கோசலை யிடத்து வாங்கிக் கொடுத்திடப் போகின் றாயோ மாசிலா மணியே தாங்கா மானத்தால் உடலி னுள்ளே ஊசலா டிடுமுன் றூய உயிர்விடப் போகின் றாயோ. ------------------------------------------------------------------------------------------- 46. ஆம்பல் - வாய். முத்து - பல். | |
|
|