52. நல்லவுன் சுற்றம் வந்தால் நாணியே மானம் விட்டுக் கொல்லெனச் சிரித்தென் னென்னக் கோசலை மனையை நாடி முல்லைவெண் ணகையாய் கையில் முறத்திணை யெடுத்துக் கொண்டு செல்லவே போகின் றாயோ செத்துநீ மடிகு வாயோ. 53. வஞ்சக மனத்தாள் நாட்டு மன்னவன் தாயாய் வாழ வஞ்சிநீ அடிமை செய்யும் மைந்தன்றா யாய்வாழ் வாயோ கொஞ்சமு மிரக்க மில்லாக் கொடியவள் தனக்கு நாளும் அஞ்சிலம் படியாய் நானு மடிமையாய் வாழ மாட்டேன். 54. தங்கிய செருக்கி னோடு சானகி முதலா வுள்ள மங்கைய ரயோத்தி மன்னன் மனைவிய ராக வாழ நங்கையுன் மருகி மார்கள் நடைப்பிணம் போல நாளும் பொங்கிய துயரி னோடு பொழுதினைப் போக்கு வாரோ. 55. ஆவுக்கு நீரென் றாலும் ஆமிழி வென்பர் மேலோர் சாவுக்குத் துணிந்தோர் கூடப் பிறர்கையால் தாம்பு கொள்ளார் மாவுக்குக் குழலைத் தந்த மங்கையுன் மருகி மார்கள் பூவுக்குங் காசு கேட்கப் போவரோ சீதை முன்னர். 56. தம்பியு மவனும் மன்னர் தாடொழச் செருக்கி னோடவ் வம்பல மணியத் தாணி யதனில்வீற் றிருக்க நாளும் எம்பியு மிவனும் அன்னா ரேவல்கேட் டெதிரில் நின்று வம்பலர் குழலாய் நீங்கா அடிமையாய் வாழு வாரோ. 57. பெற்றவ னருகி லாது பிறந்தகத் திருந்து நாளும் பொற்றொடி யொருத்தி காதற் பொருளிழந் தினைதல் போலப் பெற்றவுன் மகனை வேறு பிரித்தரு கிலாது செய்து மற்றவன் இடத்தி லன்பு வளர்த்தனன் வஞ்ச நெஞ்சன். 58. அரசரிற் பிறந்து செல்வத் தரசரில் வளர்ந்து நாடாள் அரசரிற் புகுந்து மேபே ரரசியா கியநீ யாளும் அரசிய லறிவி லாதா ளாயினை பரதன் றன்னை அரசனை யண்டி வாழ அருந்துணை செய்கின் றாயே. ------------------------------------------------------------------------------------------- 55. தாம்பு - கயிறு. மா - வண்டு. 56. அம்பலம் - அவை. அத்தாணி - கொலுமண்டபம். | |
|
|