59. இன்னன புகல ராமன் இனியவன் மன்ன னானால் என்னரு மைந்தன் றன்னை இளவர சாக்கிப் பல்லாண் டன்னவ னாண்டு பின்னர் அரசினை யளிப்பா னென்று தன்னென வயலார் தம்மை யெண்ணுமத் தையல் சொல்ல. 60. நாடியே பரதற் காகும் நலஞ்செயுந் தோழி கேட்டுப் போடிபோ பித்தி யுன்னைப் போலொரு வரையுங் காணேன் தாடகை யெனுமூ மூத்த தமிழ்மகள் ஆவி துஞ்சக் கோடிய சிலையி ராமன் கொடியவன் குணமில் லாதான். 61. உண்மையை யுரைப்பக் கேளா யுன்மண வாள னுன்றன் பெண்மையை யவாவிக் காமப் பித்தனா யுன்னைக் கேட்கத் தண்மையி னிருப்பே யுன்றன் தந்தையு மறுக்கக் காம வண்மையா லுனக்கு நாட்டை வழங்கியே மனந்தா னுன்னை. 62. நஞ்சினுங் கொடியா னிந்த நாட்டினைப் பரிச மாக வஞ்சியன் றுனக்குத் தந்து மணந்தனன் ஆகை யாலே பஞ்சின்மெல் லடியாய் நாடு பரதனுக் குரிய தேயாம் அஞ்சியுன் கேட்டுக் காக ஆவதைக் கூறு கின்றேன். 63. வரிநெடுங் கண்ணாய் அந்த வஞ்சக னிதற்கா கத்தான் பரதனை நாட்டை விட்டுப் பாட்டனூர் போகச் செய்து வரிசிலை ராமன் றன்னை நாட்டுநன் மக்க ளோடு நரியனான் பழகச் செய்து நன்மதிப் பினையும் பெற்றான். 64. செவ்விய நெறியொன் றில்லான் சேயனு மவனு முன்பால் நவ்வியே நல்ல ராக நடித்தது மிதற்கா கத்தான் அவ்விய மனத்தா ளக்கோ சலையுமுள் ளளவே யாவாள் இவ்வுள வறியா நீயும் இருந்தனை யுடந்தை யாக. 65. வெந்தொழி லரச னெல்லா வேந்தையு மழைத்து முன்றன் தந்தையை யழைத்தி லாது தவிர்ந்தது மிதற்கா கத்தான் மைந்தனென் றுவக்கின் றாயே வஞ்சக னேனு முன்பால் வந்துரைத் தானோ தாயை மறந்திலன் அறிவா யம்மா. ------------------------------------------------------------------------------------------- 64. நவ்வி - மான். | |
|
|