66. பாம்பினை நம்பி னாலும் பகைவரை நம்பே லென்று தாம்புகன் றிடுவர் மேலோர் தவிரவுட் பகைவ ரென்றன் காம்பன தோளி நஞ்சக் கருவிடை யுருவ ரன்றோ வேம்பனா ருள்ளத் துள்ளே வெளிக்கருங் கரும்ப னாரே. 67. காப்புடை மன்னன் நாடு கடத்தின னெனினு மிவ்வே மாப்புட னிதற்குக் கூட வரவிங்கு பரதன் றன்னைக் கூப்பிடக் கூடாத தந்தக் கோசலை மகனுக் கேனும் யாப்புடைத் தம்பி மீதி லெவ்வள வன்பு பாரும். 68. அடிமைபோ லுனக்க டங்கி நடந்தது மறிந்தா யன்றோ கொடியவள் பொறாமைக் காரி கோசலை மகனி ராமன் முடிபுனைந் தரச னானால் முனைப்பொடு நடந்த தற்காக் கொடுமைசெய் துன்றன் மானங் குலைத்துமே தொலைப்பா ளன்றோ. 69. மன்னவ னானா லந்த வஞ்சகன் மகனோ டுன்னைத் தொன்னக ரதனை விட்டுத் துரத்துதற் கணுவு மஞ்சான் இன்னுமுன் மைந்த னாட்டி லிருந்திடில் கொலைக்கு மஞ்சான் என்னதான் செய்வான் பாவம் எளியவன் பரதன் அந்தோ. 70. தந்தையுங் கொடியன் பெற்ற தாயுமோ கொடியள் உன்முன் வந்தவன் இரண்ட கஞ்செய் வஞ்சகன் இரக்க மில்லான் சொந்தமுங் கொடியர் உற்ற தோழருங் கொடிய ரானால் எந்தையே பரதா அந்தோ என்செய்வாய் மகனே என்றாள். 71. என்றின வுரைக்க மானும் இரண்டகஞ் செய்திட் டாரோ ஒன்றுமே யறியேன் பாவி உணர்ந்தனன் பரதன் றாய்நீ பொன்றுவே னன்னா யுன்றன் புதல்வனைக் காப்பா யென்று கன்றியே கதறித் தோழி கைகளைப் பிடித்துக் கொண்டாள். 72. கருநெடுங் கண்ணி கொண்ட கவலையை விடுவாய் முன்னுன் திருமணக் காலத் தேநீ சிறியளா யிருந்தாய் மேலும் வருமுனே மணவறைக்கு மாநிலங் கொடுத்த தாலே புரிகுழல் இல்லை யென்று பொய்சொல்வா னாகை யாலே. ------------------------------------------------------------------------------------------- 67. ஏமாப்பு - இறுமாப்பு. யாப்பு - உறுதி. 68. முனைப்பு - செருக்கு, இவ்வளவு நாளாக நீ செருக்கொடு நடந்ததற்காக. | |
|
|