பக்கம் எண் :


324புலவர் குழந்தை

   
        86.  அவ்வுரை கேளா முன்னம் இடியுண்ட அரவு போல
            அவ்விய மனத்தா னாவென் றறிவிழந் தலறி வீழ்ந்தான்
            ஒவ்வுமோ கொடிய காட்டுக் கோட்டுதல் ராமன் றன்னை
            எவ்வகை வாழ்வேன் றேவி என்னுயிர் காப்பா யென்றே.

        87.  கதறியே யெழுந்து தேவி கால்களைப் பிடிக்கத் தேவி
            அதுமுடி யாதுன் குட்டை யம்பலப் படுத்தி வைப்பேன்
            முதுமொழி யதனைக் காத்து முன்னனைக் கான்போக் கென்ன
            பதைபதைத் தடிமா பாவி பாழ்ஞ்செயற் கடிகோ லாதே.

        88.  வஞ்சகி யாராற் கெட்டாய் மாகுடி கேடி யென்ன
            வஞ்சகி நானோ பொல்லா வஞ்சகா வஞ்சித் தாயே
            நஞ்சினுங் கொடியோ யுன்னை நம்பினான் கெட்டே னந்த
            வஞ்சகி மகனோ வென்றன் மகனர சதைக்கைக் கொள்வான்.

        89.  நங்கையென் பரிச மாயுன் நாட்டினை யெனக்குத் தந்திம்
            மங்கையை மணந்த தற்கு மாறுபா டாகப் பாவி
            அங்கதை யறியே னானென் றவள்மகற் கரசைத் தந்தே
            எங்களை யேய்க்கப் பார்க்கு மிழிசெய லறிவேன் கண்டாய்.

        90.  என்மகன் பரதன் றன்னை எந்தையூர்ப் போக்கி யன்னாள்
            தன்மகன் றன்னை மக்கள் தம்மொடு பழகச் செய்து
            மன்மகன் என்று நாட்டு மக்களு மொப்பச் செய்தென்
            நன்மகன் இலாத போது முடிபுனை நாளுங் கண்டாய்.

        91.  எந்தனுக் குரிய நாட்டை எப்படி யெனைக்கேட் காதுன்
            முந்தவள் மகனுக் கீய முடிவுசெய் தனைய தற்கென்
            தந்தையை யழைக்கக் கூடத் தவிர்ந்ததென் என்றன் மைந்தன்
            உந்தனுக் கென்ன செய்தா னவன்செய்த உதவி யென்னே.

        92.  இப்படிப் பெற்ற பிள்ளைக் கிரண்டகஞ் செய்வோ ருன்போ
            லிப்படி தன்னி லுண்டோ பிறந்தவற் கிரண்ட கஞ்செய்
            தப்படி யொருவர்க் குள்ள அரசினை யொருவர் கொள்ளற்
            கெப்படி யியைந்தான் ராம னின்றையே கான்போக் கென்றாள்.

        93.  ஏதினி மறுக்கிற் பொல்லா ளிணங்கிடாள் போலும் மேலும்
            சூதையூ ரறியச் செய்வாள் தூற்றுவர் நாட்டு மக்கள்
            மாதிவள் தந்தை கேட்கின் மானம்போம் அழகன் பாவம்
            ஏதில னாவான் அந்தோ என்செய்வா னெனவுள் ளெண்ணி.