94. பரசினேன் கண்ணே நாடு பரதனுக் குரிய தேயாம் அரசிநீ யதனை ராமற் களித்தென துயிரைக் காப்பாய் அரசரோ டயோத்தி மக்கள் அறியநாட் குறித்த தான பரிசினைத் தவிர்ந்தால் மேலோர் பழித்திக ழாரோ வென்ன. 95. கொள்ளெனக் கொடுத்த நாட்டைக் கொண்டவென் உடன்பாடின்றிக் கள்ளமா யவனுக் கீந்த களவினைப் பழித்தி டாரோ உள்ளதை யுரைத்தேன் ராமன் ஊரிலு மிருத்தற் கொல்லேன் புள்ளுறை கான மின்றே போக்கியுன் மொழியைக் காப்பாய். 96. சூட்டிய மாலை ஞான்றே சொந்தமா கியவென் நாட்டைக் கேட்டிடின் நாட்டோ ருன்னைக் கெட்டவ னென்பா ரென்று கேட்டிலன் கொடுத்த பேற்றைக் கேட்டனன் மறுக்கின் மானம் ஓட்டுவே னாட்டோர்க் குங்க ளுளவினை யுரைத்தே யென்றாள். 97. செப்பினா லினிய யோத்தி சிரிக்குமென் றடிமா பாவீ எப்படி யவனிங் கில்லா துயிர்தரித் திருப்பேன் ராமா அப்பனே உனக்க யோத்தி யரசிலை யருங்கா னென்று குப்புற விழுந்து மன்னன் குடிகெடுத் தனையே பாவீ. 98. உன்மகன் நாடா ளட்டும் உன்னையான் வேண்டு கின்றேன் என்மகன் காடா ளாம லிருந்திட அருள்வா யென்று மன்மகன் வேண்ட ராமன் வஞ்சகன் நாட்டைத் தூண்டி என்மகன் அரசு கொள்வான் உயிருக்கு மிறுதி காண்பான். 99. உன்னுள வதற்கன் னானு முடந்தையா யிருந்தான் வஞ்சன் என்னிடம் நல்லோன் போல நடித்தன னியற்றா யின்பால் சொன்னவ னென்னோ டின்னுஞ் சொல்லினா னில்லை பொல்லான் இன்னினி யேகான் போக்கு மெனமொழிந் திருக்குங் காலை. 100. புன்னெறி யமைச்ச னான சுமந்திரன் பொருந்தி யாங்குத் துன்னிய தெனவே செல்வச் சுடர்முடி புனைநல் வேளை மன்னவ வுமைய ழைத்து வரச்சொன்னார் வசிட்டர் என்னச் சொன்னவுன் சொற்கள் மேலும் துயரினைத் தருது மென்றான். | |
|
|