109. என்னினி வேண்டு மானால் இப்பொழு தேசெல் கென்ன அன்னையே வருந்த வேண்டா ஆட்சியில் விருப்ப மில்லை இந்நிலக் குடிகள் தம்மை என்வழிப் படுத்து நாட்டு மன்னவ னாக வாழ மனத்தினு நினைக்க வில்லை. 110. ஈங்கொரு வேளை நான்றாழ்த் திருந்திடிற் பரதன் ஆட்சி தாங்குக வென்றெ னன்குத் தருவனென் றச்சம் போலும் நீங்குவேன் எனக்கை கேசி நீமிக நல்லன் மைந்த தீங்கொரு வருக்கும் பாவங் கனவிலுஞ் செய்ய மாட்டாய். 111. ஏதுமே யறியான் போல ஏனடிக் கின்றாய் உங்கள் சூதினை யறிவேன் தந்தை சொல்லவு மில்லைப் போலும் மாதெனை மணந்த போதே வழங்கினேன் நாட்டை யென்று பேதையென் றெண்ணி யென்னைப் பசப்புரை பேசு கின்றாய். 112. நல்லவன் போல வென்பால் நடித்தசூ தறியா துன்னை நல்லவன் என்றி யானும் நம்பியே மோசம் போனேன் அல்லவன் போலுன் றம்பிக் கிரண்டக மதுசெய் தாயே கொல்லவு மஞ்சு வாயோ கொடியநீ பரதன் றன்னை. 113. தந்தையைத் தடுத்தா யில்லை தம்பியை அழைத்தா யில்லை வந்தெனக் குரைத்தா யில்லை வஞ்சகன் மான மில்லா உந்தைசெய் திடுமச் சூழ்ச்சிக் குடந்தையா யிருந்தே யென்றன் மைந்தனைக் கெடுக்க நீயும் வஞ்சனை புரிந்திட் டாயே. 114. அடிக்கடி யுன்றாய் தந்தை மனைவியர் அனையா ரெல்லாம் மடிக்குளே நெருப்பை வைத்துக் கொண்டுமே வந்தென் முன்னர் நடிக்கவே நல்ல ரென்று நம்பியான் மோசம் போனேன் முடிக்குமு னுடைந்து தாழி மோசம்போ னீர்கள் பாவம். 115. என்மகற் குரிய தாக எனக்குமுன் கொடுத்த நாட்டைத் தன்மகற் குரிய தாக்கத் தவித்தன ளுனது நற்றாய் மன்மகன் உனது மேனி யழகெனு மயக்கத் தாலே தன்மகன் றன்சொற் றன்பேர் தன்மதிப் பையுங்கை விட்டான். ------------------------------------------------------------------------------------------- 114. மடி - வயிறு | |
|
|