130. இன்னபுன் சொல்லைக் கேளா ஏந்திழை சினந்து நோக்கிப் பின்னரென் சொன்னீர் நீராண் பிள்ளையா ஆண்மை யில்லாய் அன்னரே யுனது தன்மை யறிந்திருந் தாலென் றந்தை இன்னல மில்லாய் என்னைக் கொடுத்துமே யிருக்க மாட்டார். 131. எப்பல முறையான் வேறு புகலிலை யென்று நும்பாற் செப்பியு மென்றன் மீது சிறிதுநம் பிக்கை யின்றி இப்பவும் பரதன் பால்நீ இப்படிப் பேச வேண்டும் அப்படி நடக்க வேண்டும் என்றுரைப் பதனைப் பார்த்தால், 132. பன்னியைப் பிறர்பால் விட்டுப் பயன்பெறப் பார்க்கின் றீரோ என்னவே நினைக்க வேண்டி யிருக்கிற தையா வேண்டின் சின்னவன் றனக்கு நீர்போய்ப் பணிவிடை செய்யும் பாவி இன்னையே சாதல் நன்றா மிதோவதைச் செய்யவே னென்றாள். 133. காரிகை யுன்ற னுள்ளக் கருத்தறி யாது சொன்னேன் பூரிவெண் ணகையாய் வாவுன் பொருளொடு கலனை யெல்லாம் ஆரியர்க் களிப்பாய் வேலை யாளர்க்கு மவரைக் கேட்டுத் தாருவாய் எனம கிழ்ந்து தையலவ் வாறே செய்தாள். 134. தம்பியும் வருவே னென்னத் தாயர்க்குத் துணையார் செய்வர் அம்பனாள் நன்மை செய்யாள் பரதனோ டரசுந் தட்டான் நம்பிகேள் பரதன் என்றும் நமக்கஞ்சி நடப்பான் நன்றாய் இம்பரிற் றாயற் கச்ச மிலையெனச் சரிவா வென்றான். 135. பொன்னணி யொடுகைத் துள்ள பொருளுடை கட்டில் மெத்தை இன்னபல் வகைய வாக இதுவரை நுகர்ந்து வந்த அன்னவ ருடைமை யெல்லா மாரியர் தமக்குத் தந்து மின்னொடு மன்னன் றன்பால் விடைபெறப் பெயர்ந்து சென்றான். ------------------------------------------------------------------------------------------- 133. பூரி - மிகுதி. | |
|
|