பக்கம் எண் :


இராவண காவியம் 333

   
       150.  தேவிய ரோடு மன்னன் தேரினைத் தொடர்ந்து சென்றென்
            ஆவியே தனியா யென்னை யழுகென விங்கே விட்டுப்
            போவையோ கான மென்று புலம்பியே யுணர்வு சோம்பி
            ஓவென அலறிக் கீழே விழுந்தனன் உறுதி யில்லான்.

       151.  எடுத்தவன் தேவி மார்க ளிணைக்கையா லணைத்துத் தாங்கி
            அடுத்தொரு பிணத்தைக் கானல் கொளுத்திநீ ராடிச் செல்வோர்
            படித்தவர் நடத்திச் சென்று மூத்தவள் படுக்குங் கட்டில்
            கிடத்தினர் ராமா வென்று புலம்பியே கிடந்தான் இப்பால்.

       152.  உடன்பிறந் தவளை விட்டிங் கொருவனைப் பிரித்தாள் சீதை
            உடன்பிறந் தவனை விட்டிங் கொருத்தியைப் பிரித்தான் ராமன்
            உடன்பிறந் தின்பங் கொல்லும் ஒழிவரு தொழுநோய் போல
            உடன்பிறந் தவர்கள் வாழ்வை யொழித்தன ரிவர்க ளென்றும்,

       153.  மன்னவர் மன்னன் காம மயக்கினாற் கெட்டா னென்றும்
            தன்னல முடையாள் பாலைத் தரையினிற் கவிழ்த்தா ளென்றும்
            மின்னிவள் கானந் தன்னில் வெந்துயர் அடைவா ளென்றும்
            இன்னன பலவும் ஊரா ரியம்பியங் கயர்ந்து நின்றார்.

       154.  ஞாலத்துப் புதிய வாழ்வை நண்ணிடக் காத லுள்ளம்
            ஆலித்துக் கோலங் கொண்ட அழகிய கணவன் வீழக்
            காலத்துக் கொண்ட கோலங் களைந்தபோ லயோத்தி மானும்
            கோலத்தைக் களைந்து துன்பக் கோலங்கொண் டலங்கி னாளே.

       155.  இருந்தது போன்றே முன்போ லியற்கையா யிருந்த தின்றும்
            திருந்திய மனக்கை கேசி திருமனை செயற்கைக் கோலம்
            பொருந்திய திழந்து சோர்ந்து புல்லெனத் தோன்றிற் றுள்ளம்
            திரிந்துள விருந்த மற்றைத் தேவியர் மனைக ளம்மா.

       156.  முழவொலி முழங்க மன்றல் முரசொலி தழங்கச் செல்வர்
            மழவொலி மலியப் பெண்டிர் வாயொலி பொலியக் கொண்ட
            விழவொலி யொழியக் கெண்டை விழிகளை மூடிக் கொண்டே
            இழவொலி மலிய வாய்விட் டேங்கின ளயோத்தி மானும்.
-------------------------------------------------------------------------------------------
       154. ஆலித்து - ஆரவாரத்துடன். அலங்குதல் - வருந்துதல். 156. மழவொலி - கொஞ்சுமொழி. விழிமூடுதல் - கதவுமூடுதல். வாய் விட்டு - வாயிலைவிட்டுத் தேரைத் தொடர்ந்து சென்றனர்.