9. கான்புகு படலம் | கலி விருத்தம் | 1. தேரி லேறிமுன் சென்றவி ராமனும் ஊரை நீங்கி யுறவினை நீங்கிநற் சீரை நீங்கித் திருவொடு பன்மனை யாரை நீங்கி யடைந்தனன் காட்டினை. 2. ஈட்டு துன்பத் தினைந்தவன் கோசல நாட்டை நீங்குவோன் நான்சர யுக்கரைக் காட்டில் வந்து களித்துமுன் போலினி வேட்டை யாடுவ னோவென வெம்பினான். 3. பாங்கி மாரொடு பன்னியர் சூழ்தர ஈங்குப் போந்தினி தின்புறு தக்கன தேங்கி நன்கு திளைத்துக் களிக்கவும் ஊங்குக் கூடுங்கொ லோவென வுன்னினான். 4. இல்லை யென்ற இடைச்சியர் தம்மொடு வல்லை யென்று மனக்களி கூர்தர மல்லை யொன்று மலிபுன லாடிட ஒல்லை யொன்றுங்கொ லோவென வுள்ளினான். 5. என்று பின்னு மினையச் சுமந்திரன் ஒன்று தேரினை யோட்ட விரைவினில் நின்ற காவினை நீந்தி விரைந்துபோய்ச் சென்று கங்கைக் கரையினைச் சேர்ந்தனர். 6. மருங்கு நீள்கரை வைகி யிருக்கையிற் சிருங்கி பேரம் எனுநகர்ச் சீர்த்தியான் சுருங்கு தீமைக் குகனெனுந் தோழனை ஒருங்கு கண்டவ னுற்ற துரைத்தனன். 7. அன்ன னவ்வுரை கேட்டலு மாரழல் துன்னி யென்னத் துடித்துளம் வெய்துற என்னை யிவ்வா றிறைமுறை தப்பினன் முன்னை யென்றுனை யெண்ணிலன் மூரியான். ------------------------------------------------------------------------------------------- 3. பன்னியர் - மனைவியர். தேங்கி - மிக்கு. ஊங்கு - மேலும். 4. மல்ஐ. மல் - வளம். ஐ - சாரியை. ஒல்லை - இனியும். | |
|
|