பக்கம் எண் :


இராவண காவியம் 337

   
         16.  என்று ராம னியம்பிடத் தோணியும்
             மன்றல் மேய வடகரை நீங்கியே
             சென்ற துகுக னோடு சுமந்திரன்
             நின்று நோக்கிட நீந்தியே கங்கையில்.

         17.  தேக்க மின்றதிற் செல்கையிற் சீதையும்
             ஆக்க ளாயிர மாயிரங் கட்குடம்
             மீக்கு வேனிங்கு மீள்கையி லின்றெமைக்
             காக்கு வாயெனக் கங்கையை வேண்டினள்.

         18.  கங்கை யாற்றைக் கடந்தக் கரையினில்
             தங்கி யாங்கோர் தடித்த மரத்தின்கீழ்
             மங்கி லாதவோர் மானுமோர் பன்றியும்
             நுங்கி யாங்கு நுணங்கி யுறங்கினர்.

         19.  இருண டக்க வெழுந்து நடந்துபோய்
             மருவிப் பாரத்து வாசன் குடிசையைப்
             பெருக வுண்டு பெயர்ந்தி யமுனையை
             ஒருவி யக்கரை யுற்றனர் மற்றவர்.

         20.  ஆற்றி னைக்கடந் தக்கரை செல்கையில்
             ஆற்ற வேபல ஆவொடு கட்குடம்
             ஏற்றி யேவழி பாடுசெய் வேனெனப்
             போற்றி னாளவள் கங்கையிற் போலவே.

         21.  அன்று முன்னைய போலவவ் வாரியர்
             சென்று கானிற் றிரியு முயிர்களைக்
             கொன்று தின்று குறுக்கிப் படுத்தெழுந்
             தென்றும் போலவே யேகினர் கானிடை.

         22.  வழிநெ டுகவம் மாகொலை யாளர்கள்
             இழிய வுண்டுகை கேசியோ டேந்தலைப்
             பழிமொ ழிந்துநா டாளும் பரிசினைக்
             கழிய வெண்ணியே காலங் கழித்தனர்.

         23.  வஞ்சி யன்ன வணங்கிடைச் சேயிதழ்
             அஞ்சி லோதி யவளொடி ராமனும்
             கொஞ்சி யோவியக் கூட மெனப்படும்
             மஞ்சு லாவு மலையை யடைந்தனர்.
-------------------------------------------------------------------------------------------
         17. மீக்குவேன் - மிகுதியாக வழிபாடு செய்வேன். 18. மங்கிலாத - நல்ல. நுணங்கி - செறிந்து. 23. ஓவியக் கூடம் - சித்திரக் கூடம்.