பக்கம் எண் :


இராவண காவியம் 339

   
        32.   அன்னர் பேரவை யாக்கி வசிட்டனை
             மன்ன னின்றி வருந்துதல் ஆகுமோ
             மன்னன் மக்க ளொருவரை மாதவா
             மன்ன னாக்குக வென்ன வசிட்டனும்.

        33.   பாரை மன்னன் பரதனுக் கீந்தனன்
             .ஊரை யாள வுரியவ னாகுவன்
             வீர ரோடு விரைந்துபோய்க் கேகயம்
             சார வீங்குசெய் எண்ணச்சிந் தார்த்தனை.

        34.   உரிய செய்தியை யோதல்த காதெனச்
             சரியெ னச்சொலித் தானைத் தலைவனும்
             விரைவி னேகி மிளிர்மணிக் கேகயம்
             பரதற் கண்டு பகர்ந்தன னுற்றதை.

        35.   கேட்ட மைந்தன் விரைவிற் கிளம்பினான்
             பாட்ட னோடு பயணம் பகர்ந்துதன்
             நாட்டை நோக்கி நடந்து சிலபகல்
             காட்டை நீங்கி அயோத்தியைக் கண்டனன்.

        36.   பொலிவி ழந்த நகரின் புதுமையால்
             வலியி ழந்த மனத்தினன் மன்னவன்
             நிலையி லெங்கணு நேரடியுங் கண்டிலான்
             தலைக விழ்ந்துபோய்த் தாயினைக் கண்டனன்.

        37.   தந்தை யெங்கெனத் தாயென் சிறுவகேள்
             உந்தன் றந்தை வுயிர்துறந் தாரென
             மைந்தன் ஆவென மண்ணிற் புரண்டழு
             தெந்தை யேயென் றெழுந்து புலம்பியே.

        38.   ஆயை நோக்கியென் அண்ணனெங் கேயெனச்
             சேய கானகஞ் சென்றனன் நீயர
             சாய யோத்தியை யாளுவை யுந்தையன்
             பாய ளித்த பரிசென வன்னையும்.

        39.   நடந்த யாவு நவிலப் பரதனும்
             உடைந்த வுள்ளத் துயிர்தடு மாறிட
             அடைந்தை யோதனி யாக்கிவெங் கானெனப்
             படர்ந்த முன்னைப் பரிந்துளத் துன்னியே.
-------------------------------------------------------------------------------------------
        39. படர்ந்த - சென்ற. பரிந்து - இரங்கி.