பக்கம் எண் :


இராவண காவியம் 341

   
       3.   சேனை யோடு திருமகன் சேர்ந்ததைக்
           கான வேடர் குலக்குகன் கண்டுமே
           கோனை நாடியோ நம்மினங் கொல்லவோ
           போன வீர னொடுபொரப் புக்கனோ.

       4.   என்னு மைய முடனவ் வெயினர்கோன்
           துன்னு கங்கைத் துறைதனைக் காத்திடத்
           தன்னி னத்தைத் தகவைத் தொருவனும்
           அன்னர் தம்மை யணுகிட வெண்ணியே.

       5.   கனியொ டுபுலால் காணிக்கை யாய்க்கொடு
           தனிய னாகச்சென் றானவர் தம்மிடம்
           அனையன் யாரென அண்ணல் அமைச்சனை
           வினவ வேகுகன் என்றிடும் வேடர்கோன்.

       6.   பீழை யற்ற பெருமகன் இன்னுயிர்த்
           தோழன் கங்கைத் துறையை யுடையவன்
           ஏழை யாளனை அக்கரை யேற்றியே
           வாழ வைத்து வழித்துணை யேவினோன்.


       7.   உன்னைக் காண வருகிறான் உண்மையான்
           என்னக் கோனும் அழைத்திட எய்தியே
           மன்னைக் கண்டு வணங்கியே கையுறை
           தன்னைக் கொண்டு கொடுத்துத் தகவுடன்.

       8.   அண்ண லேபடை கண்டைய மாயினேன்
           அண்ண லையழைத் தேகவோ அல்லதெவ்
           வெண்ண மோவென வேயழைத் தேகவே
           நண்ணி னேமென நம்பியைப் போற்றினான்.

       9.   உங்க ளூரிது தங்கியின் றுண்டுநீர்
           அங்குச் சென்மென ஐய மகிழ்ந்தனன்
           தங்கு வேன்வரும் போது தடம்புனற்
           கங்கை தன்னைக் கடந்திடச் செய்கென.

       10.  நடந்து தோணியை நண்ணிடப் பண்ணவே
           அடைந்தி யாரு மமர்ந்துநா வாய்களில்
           கடந்து கங்கையைக் காலின் விரைந்துபோய்
           அடைந்து பாரத்து வாச னகத்தினை.
-------------------------------------------------------------------------------------------
6. பீழை - குற்றம். ஏழையாளன் - ராமன்.